தனது மகளுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தது முதல் ஆறு ஆண்டுகளாக அவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய 63 வயது ஆடவருக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக வேறு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ள இந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அந்தப் பெண்ணுக்கு 13 வயதாக இருந்தபோது 2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையே அவரை மூன்று முறை தகாத உடலுறவு கொண்டதாக, மனைவியை இழந்த அந்த ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்ட போது மேலும் 62 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. 2018ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதியன்று அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

