வெளிநாட்டு ஊழியர்களுக்கு புக்கிட் தீமா குடியிருப்பாளர்களின் வரவேற்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு புக்கிட் தீமா குடியிருப்பாளர்களின் வரவேற்பு

3 mins read
ad804e0c-b2ca-4e22-86c8-1414ef3b638d
29 வயது வெளிநாட்டு ஊழியர் ஆண்டனி ஜார்ஜ் டார்வின். -

கொவிட்-19 நோய்ப்பரவலின்போது வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் மக்கள் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக சிங்கப்பூரின் பல்வேறு வட்டாரங்களில் அந்நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக தற்காலிகத் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியின் பணியாளர்களுக்கான தங்கும் விடுதிகளும் ஒன்று. 90, 92 மற்றும் 94 கிஸ்மிஸ் அவென்யூவில் அமைந்துள்ள இந்த விடுதிகள் கிட்டத்தட்ட 1,030 பேர் வரை தங்குவதற்கான வசதியைக் கொண்டுள்ளன.

ஊழியர்கள் மே மாதம் நடுப்பகுதி முதல் அவர்களுக்காகவே புதுப்பிக்கப்பட்ட இந்த விடுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர். இவர்களது வருகைக்கு முன்பாகவே புக்கிட் தீமாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட இருபது குடியிருப்பாளர்கள் இவர்களை வரவேற்பதற்கான உதவியையும் ஊக்கத்தையும் கொடுக்க முன்வந்தனர். ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி சிம் ஆன், அடித்தளத் தலைவர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இந்த வட்டாரவாசிகள் 10,000 வெள்ளிக்கு மேல் நிதி திரட்டினர்.

அத்துடன் கொசுவர்த்தி, சோப்பு, பிஸ்கெட் ஆகியவற்றைக் கொண்டுள்ள 1,100 பொட்டலங்கள் ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அத்துடன், இந்த வட்டாரவாசிகளின் குழுவினர் வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடன் இணைந்து முகக்கவசங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர். தற்போது தாம் தங்கியுள்ள இடம் மிகவும் வசதியாக உள்ளது என்று தெரிவித்த வெளிநாட்டு ஊழியர் சாம்பசிவம் குமரவேலு, 46, வட்டாரவாசிகளின் உதவும் மனப்பான்மையைக் கண்டு அகம் மகிழ்வதாகக் கூறுகிறார்.

"அவர்கள் தாமாகவே முன்வந்து இப்படி உதவுவதால் வேலைக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் நாங்கள், கூடுதல் நம்பிக்கையையும் தெம்பையும் உணர்கிறோம்," என்று தமிழகத்தின் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு குமரவேலு தெரிவித்தார். இந்தத் தற்காலிகத் தங்குமிடத்தில் வசதிகள் நன்றாக நிர்வகிக்கப்படுவதாகவும் ஊழியர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப்படுவதாகவும் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதாகவும் 29 வயது ஆண்டனி ஜார்ஜ் டார்வின் தெரிவித்தார்.

"இதனால் நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். இரண்டாம் கட்ட தளர்வில் எனக்கு மீண்டும் வேலைக்குத் திரும்பும் வாய்ப்பு கிடைத்தால் தைரியத்துடன் முன் நிற்பேன்," என்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஆண்டனி கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுடன் பணியாற்றும் தொண்டூழியர்களிடம் ஆலோசனை பெற்று அந்த ஊழியர்களுக்குத் தேவையான பொருட்களைத் தெரிவு செய்ய முடிந்ததாக புக்கிட் தீமா குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஆன்னி டான், 49, தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத இந்த ஊழியர்களின் தேவைகளை நாங்கள் சேகரித்துள்ள பொருட்கள் ஓரளவு நிறைவேற்றும் என நம்புகிறோம்.

"நோய்ப்பரவலை முறியடிக்கும் காலக்கட்டத்தின்போது எங்களில் பலருக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உபயோகமான வழியில் இதற்காகப் பயன்படுத்தியது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்," என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி மட்டுமில்லாமல் அவர்களது மனநலம் குறித்து எண்ணுவதாகவும் திருவாட்டி டான் கூறினார்.

"நோய்ப்பரவலின்போது சொந்த நாட்டிலேயே வாழும் சிங்கப்பூரர்களுக்கு குழப்பமும் பயமும் ஏற்படும்போது இந்த ஊழியர்கள் உணரும் அச்சம் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கக்கூடும்.

"அவர்களுக்கு உதவும் பொறுப்பை அரசாங்கத்திடம் மட்டும் விட்டுவிடாமல் மக்களாக ஒன்றுகூடி உதவ முன்வருவது நல்லது," என்றும் அவர் சொன்னார்.