அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் சமூக அறப்பணி

சிங்கப்பூரில் சமுதாயம் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வரும் அமைப்பான ‘அப்துல் கலாம் இலட்சியக் கழகம்’ திரு கே கேசவபாணியின் தலைமையில் இயங்கி வருகிறது.

உலகெங்கும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, கழகத்தின் உறுப்பினர்கள் மூலம் சேகரித்த சுமார் 5000 வெள்ளி நிதியைக் கொண்டு நானூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் உடலில் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய மூலிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை இம்மாதம் 20ஆம் தேதி கழகம் வழங்கியது.

அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் செயலாளர் திரு அருமைச்சந்திரன், துணைச் செயலாளர் திரு ஜான் இராமமூர்த்தி, பொருளாளர் திரு ஜோதி மாணிக்கவாசகம் ஆகியோரும் தங்கும் விடுதிகளுக்கு நேரில் சென்று வழங்கினர். பல நாட்கள் பணிக்குச் செல்ல முடியாமல் விடுதிகளில் முடங்கி இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

பல வகையிலும் உதவி வரும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் சமூக அமைப்புகளுக்கும் அவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.