செய்திக்கொத்து (சிங்கப்பூர்) 30-6-2020

அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவருக்கு நான்கு வாரச் சிறை

தமது சிங்கப்பூர் நிரந்தரவாசி விண்ணப்பத்தைத் துரிதப்படுத்தும் நோக்கில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் முன்னாள் வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் $1,500 லஞ்சம் கொடுக்க முயன்ற மலேசியரான ஃபென்னி டே ஹுய் நீக்கு நேற்று நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. டேக்கு உதவிய இருவருக்கு எதிரான வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன.


 

குறைந்த வருமான மூத்தோருக்கு மலிவான இணையச் சேவை

குறைந்த வருமானம் ஈட்டும் முதியோர், மாதம் $5 மட்டுமே கட்டக்கூடிய மலிவான கைபேசி இணையச் சேவைத் திட்டத்திற்குத் தகுதிபெறலாம். இக்குறிப்பிட்ட பிரிவினர் இணையத்தின் மூலம் இணைய உதவுவதற்காக ‘மொபைல் எக்செஸ் ஃபோர் சீனியர்ஸ்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ஓராண்டு கைபேசித் திட்டங்களுக்கு இவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இணையச் சேவை திட்டங்களுடன் 20 வெள்ளியிலிருந்து தொடங்கும் விலையில் அடிப்படை அம்சங்களுடைய திறன்பேசிகளும் கிடைக்கும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் நேற்று அறிவித்தது. தங்களுக்கான தரவு எல்லையை மூத்தோர் மீறினால் கூடுதல் கட்டணம் இருக்காது. இணையச் சேவையின் வேகம் கட்டுப் படுத்தப்படும். ‘சிங்டெல்’, ‘ஸ்டார்ஹப்’, ‘எம்1’, ‘டிபிஜி டெலிகம்’ ஆகிய நிறுவனங்கள் இத்திட்டங்களை வழங்குகின்றன. இவற்றுக்கு ஒருவர் தகுதிபெற 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவராக இருப்பதுடன் ‘கோம்கேர்’ உதவி பெறுபவராகவோ வீவக பொது வாடகைத் திட்டத்தின்கீழ் உதவி பெறுபவராகவோ இருக்க வேண்டும்.


 

எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்களுக்கு ஆதரவு

பிள்ளை வளர்ப்புக்கான செலவுகளைப் பெற்றோர் சமாளிப்பதற்காக 2016ஆம் ஆண்டில் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு (சிடிஏ) திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி அரசாங்கம் ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் $3,000ஐ செலுத்தும். இருப்பினும் இதைப் பற்றி அறியாதோரும் உண்டு என்ற பட்சத்தில் எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்களுக்கு இதைப் பற்றி அறியச் செய்திட அமைச்சுகளும் அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. 780க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதன் தொடர்பில் ஆதரவு நல்கி வருவதாக கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மக்கள் கழகம், சிண்டா ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.


 

புகையிலை பொருட்களுக்கு ஒரே விதமான பொட்டல அமைப்பு

புகையிலை பொருட்கள் அனைத்தும் நாளை முதல் ஒரே மாதிரியான பொட்டல அமைப்பில் இருக்க வேண்டும். அவற்றில் சுகாதார எச்சரிக்கைகள் தாங்கிய படங்களும் பெரிதாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதுவரை புகைப்பிடிக்காமல் இருப்பவர்கள் அந்தப் பழக்கத்தை ஆரம்பிக்கக்கூடாது என்பதற்காகவும் புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கத்தைக் கைவிடவேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை நடப்புக்குக் கொண்டுவரப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.


 

குளிப்பதைப் படமெடுத்த முன்னாள் என்யுஎஸ் மாணவருக்குச் சிறை

இரு வேறு சம்பவங்களில் பெண்கள் குளிப்பதைப் படமெடுத்த முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவரான 26 வயது ராயன் யூ ஜுன் சாவ்வுக்கு நேற்று ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றங்களைப் புரிந்தபோது என்யுஎசில் மாணவராக இருந்த யூ, அதன் பின்னர் பட்டம் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் குளியலறைக்குள் நுழைந்து தன் கைபேசியை உயரத்தில் பிடித்தவாறு குளித்துக்கொண்டிருந்த பெண்களை யூ படமெடுத்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.