மாயாஜால கலைஞர் குற்றவாளி என தீர்ப்பு

1 mins read
85dd7fd9-46a9-456b-b625-5f29505d13cd
அந்த மாயாஜால கலைஞருக்கு எதிராக இன்னமும் இதர 55 வழக்குகள் நிலுவையில் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாயாஜால கலைஞரான 39 வயது எஸ். சந்திரன், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்க ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ் போலி கோரிக்கைகளைத் தாக்கல் செய்து பணம் பெற மற்றவர்களுக்கு உதவியதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை மேற்கொண்ட நீதி மன்றம் அவரைக் குற்றவாளி என்று இன்று (ஜூலை 3) தீர்ப்பளித்தது.

அந்த மாயாஜால கலைஞருக்கு எதிராக இன்னமும் இதர 55 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

'பாரடைஸ் கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை நடத்திவந்த சந்திரன், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு $200,000 பிணை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும். சந்திரன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் ஓர் ஆடவரும் இரு பெண்மணிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மகேந்திரன் ராஜூ, சாந்தி பெரியசாமி, கிறிஸ்டல் பிரியா ராகவன் என்ற அந்த மூவரும் தலா $24,000க்கும் அதிக தொகையை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் இருந்து சட்டவிரோதமாகப் பெற்று இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் அந்தப் பணத்தைப் பெற உதவிய சந்திரனுக்கு அவர்கள் அந்தத் தொகையில் பாதியைக் கொடுத்து இருக்கிறார்கள் என்று அரசினர் தரப்பு தெரிவித்தது.

மகேந்திரன் ராஜூவுக்கு 2017ல் அதிகபட்சமாக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. $49,212 தொகையைச் செலுத்தும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதர இரண்டு மாதர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.