ஜோகூர்; சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான ஆர்டிஎஸ் எனப்படும் பெருவிரைவு ரயில் போக்குவரத்து தொடர்பான அம்சங்கள் இம்மாத இறுதிக்குள் பேசித் தீர்க்கப்பட்டுவிடும் என்று மலேசியா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
"இந்த ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் 222 பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட வேண்டி இருந்த நிலையில் இரு நாடுகளும் 220 பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துவிட்டன.
"எஞ்சி இருப்பது இரண்டு விவகாரங்கள் மட்டுமே. அவை குறித்து வரும் 13ஆம் தேதி தொழில்நுட்பக் குழு கூடி ஆலோசிக்கும்," என்று மலேசிய மூத்த அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த இரு விவகாரங்கள் என்ன என்பதை அவர் விவரிக்கவில்லை. மலேசியாவின் அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சருமான திரு அஸ்மின், நேற்று முன்தினம் ஜோகூரில் உள்ள தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெருவிரைவு ரயில் திட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சை தொடர்புகொண்டு பேசினேன். எஞ்சி இருக்கும் இரு அம்சங்கள் குறித்து இரு நாட்டுக் குழுக்களும் விரைவில் பேசித் தீர்த்துவிடும் என்று அமைச்சின் சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
"திட்டம் தொடர்பான முழு அளவிலான பேச்சுவார்த்தையையும் இம்மாதத்திற்குள் முடிக்க வேண்டி உள்ளதால் அந்த இரு பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண வேண்டியது அவசியம்," என்றார்.
ரயில் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க மேலும் மூன்று மாத அவகாசத்தை கடந்த மே மாதம் மலேசியா கேட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் அளித்த சிங்கப்பூர் இதுவே இறுதி கெடு என்றும் தெரிவித்திருந்தது.

