தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் சேவை நம்பகத்தன்மை கூடியது

2 mins read
afa7a346-ebf6-4524-a19f-15fd2288a42b
-

சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் சேவை (எம்ஆர்டி) கட்டமைப்பு புதிய மைல்கல்லை எட்டி, சாதனை படைத்து இருக்கிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், இரு ரயில் சேவைத் தாமதங்களுக்கு இடையிலான சராசரி பயண தூரம் 1.6 மில்லியன் கிலோமீட்டராக உயர்ந்து இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அது 1.4 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது.

தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக இன்று இதனை அறிவித்த ஓய்வுபெறும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், இதனை ஓர் அற்புதமான நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டில் 133,000 கிலோமீட்டராக இருந்த நிலையில், இப்போது அது 1,638,000 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் கோ தெரிவித்துள்ளார். "சிங்கப்பூரர்கள் சிறந்த சேவையைப் பெறத் தகுதியானவர்கள் என்று நான் சொன்னேன். உலகின் சிறந்த ரயில் சேவை வழங்குநர்களில் நாமும் ஒருவராக இருக்க வேண்டும்.

"பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில், இதுவே எங்களது இலக்காக இருந்தது. எப்போதும் அதுவே எங்களின் இலக்காக இருக்கும்," என்றார் திரு கோ. இந்தச் சாதனைக்காக ரயில் சேவை வழங்குநர்களுக்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் அவர் புகழ்மாலை சூட்டினார்.

"1.6 மில்லியன் கி.மீ. என்ற இந்தப் புதிய மைல்கல், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ரயில் சேவைக் குழுவினர் கொண்டுள்ள கடப்பாட்டிற்கும் அவர்களின் திறமைக்கும் சான்று பகர்கிறது. நிபுணத்துவம் பெற்ற அந்தக் குழுவினருடன் நம்முடைய பயணிகளுக்குச் சேவை ஆற்றுவது கௌரவமும் தனிச்சிறப்பும் மிக்கது," என்று அமைச்சர் புகழ்ந்தார்.

"கடந்த 12 மாதங்களில் இரு ரயில் சேவைத் தடைகளுக்கு இடையிலான சராசரி பயண தூரமாக 1,638,000 கிலோமீட்டரை எட்டி இருப்பதன் மூலம் உலகளவில் சிறந்த ரயில் சேவை வழங்குநர்களில் ஒன்றாக நம்மை ஆக்கி இருக்கிறது," என்று இன்னொரு பதிவு வாயிலாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.