தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களில் குறைந்தது 90,000 பேர் வேலைக்குத் திரும்பிவிட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நிர்வாகத்திற்கான நிபந்தனைகளை நிறைவுசெய் யும் வேலை இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வேலைக்கு திரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் கூறினார். கட்டுமானத் தளங்கள் எங்கு அமைந்துள்ளன, எவ்வளவு பெரிதாக உள்ளன என்ற அடிப்படையில் அவை திறக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அப்படிப்பட்ட முறையைப் பின்பற்றி வேலையிடங்களை திறப் பதற்கான எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றார்.
"அவற்றைத் திறக்க முக்கியமான இரு தகுதிநிலைகள்தான் உள்ளன. குடியிருப்புப் பகுதியாக இருந்தாலோ போக்குவரத்து அல்லது கட்டடங்கள் சார்ந்த கட்டுமான இடங்களாக இருந்தாலோ நாங்கள் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை குத்தகையாளர் வேலை இடத்தில் சரிவர செயல்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அடுத்து, வேலையிடத்திற்கு வரும் ஒவ்வொருவரும் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் குணமடைந்த நோயாளியாகவோ அல்லது நோய்த்தொற்று இல்லாதவராகவோ இருக்கலாம்.
"இருமுறை சோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிறகே இவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்படும். இந்த நிபந்தனைகளை நிறைவு செய்யும் வேலையிடம் எங்கு இருந்தாலும் அது செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படும்," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சுமார் 180,000 ஊழியர்கள் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் அல்லது இந்நோயால் பாதிப்படையவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சு வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
"இந்த ஊழியர்களில் குறைந்தது 90,000 பேர் தற்போது வேலைக்குத் திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளோரின் வேலையிடங்களில் இன்னும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் அமல்படுத்தப்படவேண்டியுள்ளதால் அவர்கள் வேலைக்குச் செல்லவில்லை," என்று அவர் விளக்கினார்.
இம்மாத இறுதிக்குள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 80% ஊழியர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்படுவதை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

