சிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் 'கவிவாணர்' ஐ. உலகநாதன் காலமானார்

2 mins read
7dcb4d96-b9ee-4735-9cde-a2678af5bcb2
கவிவாணர் ஐ. உலகநாதன் தோற்றுவித்த மாதவி இலக்கிய மன்றம் நேற்று (ஜூலை 7) காணொளி வழி அவரது நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. படம்: கவிவாணர் ஐ. உலகநாதன் குடும்பத்தார் -

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா என தமிழுலகம் போற்றும் கவிஞர், கவிவாணர் ஐ. உலகநாதன் இம்மாதம் 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 83.

அவர், சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்; சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

12-9-1936ல் மலேசியாவின் ஈப்போவில் பிறந்தவரான கவிஞர், சிங்கப்பூரில் தமிழ்க் கவிதை வளர்த்தவர். தந்தையார் ஐயாசாமி. தாயார் சாலம்மாள்.

தமது 19வது வயதில் தமிழ் முரசு மாணவர் மணிமன்றம் மூலம் எழுதத் தொடங்கிய திரு உலகநாதன் இன்றைய முன்னணிக்கவிஞர்கள் பலரை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி வளர்த்தவர்.

முதன்முதலில் கட்டுரை எழுதுவதில் தொடங்கிய இவரது எழுத்துப்பணி முழுக்க முழுக்க கவிதைத் துறையில் இவரைக் கால்கொள்ள வைத்தது.

பேச்சுத்துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். மலேசியாவில் குறிப்பிடத்தகுந்த மேடைப் பேச்சாளராக விளங்கியவர்.

மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், சிறு காப்பியங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 50க்கும் மேற்பட்ட சிறு கதைகள், 500க்கும் மேற்பட்ட கவிதைகள் என பன்முகத்திறன் காட்டியவர் திரு உலகநாதன்.

தமிழ் மலர் இதழில் பணியாற்றிக்கொண்டு தமிழ்க் கவிதைகள் வளர்த்தார். 1961ஆம் ஆண்டில் "மாதவி இலக்கிய மன்றத்தை" நண்பர்களுடன் இணைந்து நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.

தமிழர் இயக்கங்கள் பலவற்றில் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் தமிழ்ப் பணியாற்றியவர்.

அவர் தோற்றுவித்த மாதவி இலக்கிய மன்றம் நேற்று (ஜூலை 7) காணொளி வழி நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பெங்களூருவிலிருந்து கவிவாணரின் குடும்பத்தினரும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறைந்த கவிஞருக்கு, நீலாவதி என்ற மனைவியும் நந்தகுமார், விஜயகுமார், செல்வகுமார் என்ற மகன்களும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்