செய்திக்கொத்து (சிங்கபபூர்) 10-7-2020

அல்-அன்சார் பள்ளிவாசலில் தொழுகை தொடக்கம்

கொவிட்-19 கிருமி தொற்றி இருப்பதாக உறுதிப் படுத்தப்பட்ட ஒருவர், ஜூன் 26ஆம் தேதிக்கும் ஜூலை 2ஆம் தேதிக்கும் இடையில் மாலை நேர தொழுகைக்காக பிடோக் நார்த்தில் இருக்கும் அல்-அன்சார் பள்ளி வாசலுச்கு 8 தடவை சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அந்தப் பள்ளிவாசலிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பள்ளிவாசல் ஜூலை 7ஆம் தேதி மாலை முதல் ஜூலை 8ஆம் தேதி வரை மூடப்பட்டது. பரந்த அளவில் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எங்கும் கிருமிநாசினி அடித்து சுத்தப்பபடுத்தப்பட்டது.

பிறகு பள்ளிவாசல் ஜூலை 9 முதல் சேவைகளைத் தொடங்கியது. திட்டமிட்டபடி இன்று ஜூலை 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 

‘ஆன்மிக மருத்துவருக்கு’ 15 மாத சிறைத்தண்டனை

 

ஆன்மிக மருத்துவர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட அப்துல் ரசாக் அப்துல் ஹமீது, 66, என்ற ஆடவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு மாதர்களை மானபங்கப்படுத்தியதற்காக அவருக்குத் தண்டனை கிடைத்தது. மானபங்கம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கடந்த மார்ச் மாதம் குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதே போன்ற இதர ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்துல் ரசாக், தான் நடத்தி வந்த பழைய சைக்கிள் கடையில், திரை மறைவுக்குப் பின்னால், மடக்கு படுக்கை ஒன்றில் உடம்புப்பிடி, மாந்திரீகக் காரியங்களைச் செய்துவந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அவர், சென்ற ஆண்டு மே 25ஆம் தேதியன்று 39வயது மாதையும் அதற்கு அடுத்த மாதத்தில் ஒரு நாளில் 34 வயது மாதையும் மானபங்கம் செய்ததாக விசாரணையில் குறிப்பிடப்பட்டது. தான் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்றும் ஆகையால் தன் மீது கருணை காட்டும்படியும் தண்டனை விதிக்கப்பட்டபோது, ஒரு கடிதம் மூலம் நீதிமன்றத்தை அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டார்.

குற்றவாளியின் மருத்துவப் பிரச்சினைகளை சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை நல்ல முறையில் கையாள முடியும் என தமக்கு நம்பிக்கை உள்ளதாக வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.


 

துவாஸ் அருகே உடல் மீட்பு

 

துவாஸ் அருகே சுமார் 2.1 கடல் மைல் தொலைவில் ஒரு படகில் இருந்து மூவர் கடலில் விழுந்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை காலை சுமார் 8 மணிக்கு சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையத்திடம் மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து, இந்த ஆணையத்தின் இரண்டு சுற்றுக்காவல் படகுகளும் போலிஸ் கரையோர காவல் படையைச் சேர்ந்த ஒரு கலமும் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் கப்பலும் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டன.

போலிஸ் கரையோர காவல்படை ஓர் உடலை மீட்டது. அந்த உடல் படகில் இருந்து கடலில் விழுந்த மூவரில் ஒருவருடையதா என்பது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அறிக்கை ஒன்றில் ஆணையம் தெரிவித்தது.


 

போலிசில் தேவாலயம் புகார்

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயம், தன்னுடைய நிறுவனரான கோங் ஹீ, மக்கள் செயல் கட்சியின் டி-சட்டையைப் போட்டு இருப்பதைப் போன்ற திருத்தப்பட்ட புகைப்படம் இணையத்தில் புழங்குவதாக போலிசில் புகார் செய்துள்ளது.

அந்தப் படம் மின்னிலக்க ரீதியில் திருத்தப்பட்டு இருப்பதாக இந்தத் தேவாலயம் தன் உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தக் குறிப்பு அந்தத் தேவாலயத்தின் இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் திரு கோங், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் பிரசாரம் செய்யவில்லை என்று அந்தக் குறிப்பு மேலும் கூறியது. இதன் தொடர்பில் போசிலில் புகார் தெரிவித்துள்ள தேவாலயம், அந்தப் படத்தை அகற்றும்படி ஃபேஸ்புக் நிறுவனத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.

 


 

நேற்று அதிக குளிர்; 22.9 டிகிரி செல்சியஸ் பதிவு

சிங்கப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று வெப்பநிலை 22.9 டிகிரி செல்சியசாக இருந்தது.

பாசிர் பாஞ்சாங்கில்தான் மிகக் குறைவாக 22.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. காலையில் இடியுடன் கூடிய மழையை அடுத்து பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 23 முதல் 25 டிகிரி செல்சியசாக இருந்தது.

நேற்று நண்பகல் நேரத்தில் வெப்பநிலை 25 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை நிலவியது.

கடந்த ஒரு வாரத்தில் நிலவிய அன்றாட நண்பகல் வெப்பநிலை 28 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!