ஹெங்: எல்லாரையும் சென்றடைவோம்

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் அவர்கள் அனைவரையும் சென்றடைவோம் எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

திரு ஹெங், டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், திருவாட்டி ஜெசிக்கா டான், திருவாட்டி ஷெரில் சான், திரு டான் கியட் ஹாவ் ஆகியோர் அடங்கிய மக்கள் செயல் கட்சி அணி ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் 53.41% வாக்குகளைப் பெற்று, வெற்றிமாலை சூடியது.

இருப்பினும், 2015ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் இம்முறை மசெகவின் வாக்கு விழுக்காடு சரிந்தது. அப்போது மசெக 60.73% வாக்குகளைப் பெற்றிருந்தது.

கடந்த முறையைப் போலவே இம்முறையும் மசெகவை எதிர்த்து பாட்டாளிக் கட்சி போட்டியிட்டது. இம்முறை அங்கு பாட்டாளிக் கட்சி சார்பில் திரு அப்துல் ஷரிஃப் அபு காசிம், திரு டைலன் இங், திரு கென்னத் ஃபூ, திரு டெரன்ஸ் டான், திருவாட்டி நிக்கோல் சியா ஆகியோரைக் கொண்ட அணி களமிறக்கப்பட்டது. அந்த அணி 46.59% வாக்குகளைப் பெற்று, மசெகவுக்குக் கடும் போட்டியைக் கொடுத்தது.

இந்நிலையில், தங்களை வெற்றிபெறச் செய்த ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிவாசிகளுக்குத் துணைப் பிரதமர் ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“மசெக அணி மீதான உங்களது நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. பொதுத் தேர்தல் 2020 முடிந்துவிட்ட நிலையில், அடுத்து நாம் தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தி, நம் வாழ்க்கையை, நம் வேலைகளை, நம் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

“நாம் அனைவரும் இணைந்து, துடிப்பான, பரிவுமிக்க, பசுமையான ஈஸ்ட் கோஸ்ட் சமூகத்தை உருவாக்குவோம். தொகுதிவாசிகளின் தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்துகொள்ள ஏதுவாக அனைவரையும் சென்றடைவோம்.

“கடந்த பல ஆண்டுகளாகக் கடப்பாட்டுடன் பணியாற்றி வரும் மசெக ஆர்வலர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் மிக்க நன்றி. அதுபோல, பொதுத் தேர்தலில் பங்காற்றிய அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி,” என நிதியமைச்சருமான திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

முந்தைய இரு பொதுத் தேர்தல்களில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்ட திரு ஹெங், இம்முறை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக அணிக்குத் தலைமையேற்று, வெற்றி தேடித் தந்திருக்கிறார்.