கடந்த மாதம் நடைபெற்ற 'ஓ' நிலை, 'ஏ' நிலை தாய்மொழி தேர்வுகளின்போது கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் காரணமாக எழுத இயலாமல் போன பகுதிகள் யாரும் பாதிக்கப்படா வண்ணம் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட, இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட, உடல்நலமற்ற மாணவர்களால் ஆண்டின் நடுப்பகுதி எழுத்துத் தேர்வை எழுத முடியவில்லை. இது குறித்து 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித் தாளிடம் பேசிய வாரியத்தின் பேச்சாளர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், எஞ்சியிருக்கும் வாய்மொழி மற்றும் கேட்டல் கருத்தறிதல் தேர்வுகள் இம்மாதம் நடத்தப்படும்போது அவர்களும் அதில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
எழுத்துத் தேர்வு நடைபெற்ற சமயத்தில் சில மாணவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மேலும் நான்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிடோக் வியூ உயர்நிலைப் பள்ளி, ஈஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப் பள்ளி, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப் பள்ளி, ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் அவர்கள்.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களோடு தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் 14 நாள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது அல்லது சுகாதார அமைச்சால் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

