எம்ஆர்டி நிலைய ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகள்

எம்ஆர்டி நிலையங்களில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தொண்டூழிய அமைப்பான பி கைன் எஸ்ஜி பரிவுப் பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கியது.

10 எஸ்பிஎஸ் டிரான்சிட், 18 எஸ்எம்ஆர்டி எம்ஆர்டி நிலையங்களில் பணியாற்றும் 1,060 துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிஸ்கட்டுகள், காப்பித் தூள், நன்றி தெரிவிக்கும் குறிப்புகள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் தங்குளுக்கிடையே பகிர்ந்துகொள்ள 146 பரிவுப் பொட்டலங்களை பி கைன் எஸ்ஜி வழங்கியது. எம்ஆர்டி நிலைய ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்கள் கைப்பட எழுதிய நன்றிக் குறிப்புகளைக் கொண்ட ஒரிகாமி இதயங்கள் அடங்கிய பதாகையை பி கைன் எஸ்ஜி தொண்டூழியர்கள் தந்தனர்.

பி கைன் எஸ்ஜி அமைப்பின் இத்திட்டத்துக்கு சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், கலாசார, சமூக, இளையர் அமைச்சர், யூத்ஸ் அவர் சிங்கப்பூர் நிதி ஆகியவை ஆதரவு வழங்கின.

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எம்ஆர்டி நிலையங்களில் பணியாற்றம் துப்பரவுப் பணியாளர்களும் மற்ற ஊழியர்களும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக பி கைன் எஸ்ஜி திட்டத்தின் தலைவரான 34 வயது டான் யான் சி தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.