மாணவிக்குத் தொற்று என தவறான தகவல்; மருத்துவமனை விளக்கம்

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது எனத் தெரியவந்துள்ளது.

உண்மையில் அந்த உயர்நிலை 1 மாணவியை கொரோனா தொற்றவில்லை என்றும் தனது ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த மனிதத் தவறே அவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக வெளியான அறிவிப்புக்குக் காரணம் என்றும் டான் டோக் செங் மருத்துவமனை விளக்கமளித்து உள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளித்தோழர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் அந்த மாணவியின் சளி/எச்சில் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவரையும் கொரோனா தொற்றி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், “எங்களது ஆய்வுக்கூடத்திலிருந்து தவறான அறிக்கை அளிக்கப்பட்டதே இந்தத் தவற்றுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நோயாளியின் மாதிரியில் பெயர் மாற்றி ஒட்டப்பட்டதால் தவறு நிகழ்ந்துவிட்டது,” என டான் டோக் செங் மருத்துவமனை ஓர் அறிக்கை மூலமாக நேற்று தெரிவித்தது.

அந்த மாணவி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாகவும் மருத்துவமனை கூறியது.

தேசிய தொற்றுநோய்த் தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இன்னொரு நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

இந்தத் தவற்றைக் கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறிய சுகாதார அமைச்சு, அது குறித்து விசாரித்து வருவதாகவும் ஆய்வகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அந்த மாணவிக்கு முதலில் தனது ஆய்வுக்கூடத்தில்தான் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதாக டான் டோக் செங் மருத்துவமனை குறிப்பிட்டது. பின்னர் அந்த மாணவி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இருமுறை சோதனை நடத்தப்பட்டது. அவ்விரு சோதனைகளிலும் அவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என முடிவுகள் வந்தன.

அதனைத் தொடர்ந்து, அவரிடம் முதலில் சேகரித்த சளி/எச்சில் மாதிரியை டான் சோக் செங் மருத்துவமனை ஆய்வுக்கூடம் மீண்டும் சோதித்துப் பார்த்தது. அந்தச் சோதனை முடிவும் அவரை கொரோனா தொற்றவில்லை என்றே காட்டியது.

இதையடுத்து, மாதிரியில் பெயர் மாறிய நிகழ்வு குறித்து இருவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக மருத்துவமனை கூறியது.

“இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், பள்ளியில் கிருமி தொற்றிய முதலாவது நிகழ்வாக இது அமைந்திருக்கும். இவ்வேளையில், ஆய்வுக்கூடம் தவறாக அறிக்கை அளித்துவிட்டதால் ஏற்பட்ட நிகழ்வு இது என்று சுகாதார அமைச்சும் டான் டோக் செங் மருத்துவமனையும் தெளிவுபடுத்தி இருப்பது நிம்மதி அளிக்கிறது,” என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக கூறியிருக்கிறார்.

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிட்டத்தட்ட 70 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்களில் எவரையும் கொரோனா தொற்றவில்லை எனத் தெரியவந்தது.

கடந்த வாரத்தில் இருந்தே அந்தப் பள்ளி பலமுறை சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகவும் கடந்த சனிக்கிழமையன்று மேலும் பலமுறை அதைச் செய்ததாகவும் அமைச்சு கூறியது.

சுகாதார அமைச்சின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், அந்தப் பள்ளியின் உயர்நிலை 1 மாணவர்கள் அனைவரும் கடந்த புதன், வியாழனன்று வீட்டிலிருந்து கல்வி பயின்றனர். கூடுதல் முன்னெச்சரிக்கையாக இந்த வாரமும் அவர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்தே கற்கும் முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!