தொடர்பில்லாக் கண்காணிப்புடன் புதிய தனிமைப்படுத்தல் பிரிவு

தொடர்பில்லாக் கண்காணிப்புடன் புதிய தனிமைப்படுத்தல் பிரிவு

2 mins read
c5168797-1bf1-4a97-bf5d-a9c02c5053ed
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் கார்நிறுத்தப் பூங்காவில் 50 அறைகளுடன் கூடிய புதிய தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (எஸ்ஜிஎச்) 50 தனிமைப்படுத்தும் அறைகளுடன் அமைக்கப்பட்டு உள்ள புதிய தனிமைப்படுத்தல் பிரிவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மற்ற தொற்றுநோய் பாதிப்பு இருப்போருக்கும் இந்தப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும்.

'வார்டு@போயர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரிவு, எஸ்ஜிஎச்சின் போயர் புளோக்கை ஒட்டி இருக்கும் கார் நிறுத்தப் பூங்காவில் கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 3,200 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்தத் தனிமைப்படுத்தல் பிரிவை அமைக்கும் பணிகள் கடந்த மே மாத மத்தியில் தொடங்கி, ஆறு வாரங்களில் நிறைவுபெற்றன.

ஒவ்வோர் எதிரழுத்த தனிமைப்படுத்தல் அறையும் 5.6 மீ. நீளமும் 2.3 மீ. அகலமும் 2.5 மீ. உயரமும் கொண்டது; கழிப்பறை, குளியலறை வசதி இணைக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் நிலைமை மோசமாவதற்கான அறிகுறிகளை தொடர்பில்லாக் கண்காணிப்பு முறை மூலம் மருத்துவக் குழு முன்னதாகவே கண்டறிய முடியும் என்பதால் முன்கூட்டியே அவருக்கு சிகிச்சையளிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, நோயாளிகளின் மணிக்கட்டில் 'பயோசென்சார்' எனும் உணர்கருவி அணிவிக்கப்படும். அக்கருவி நோயாளியின் இதயத் துடிப்பு, சுவாச விகிதம், உயிர்வாயு அளவு ஆகியவற்றை கம்பியில்லா முறை மூலம் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிவிடும்.

அத்துடன், நோயாளியின் நிலைமை குறித்த முக்கிய அறிகுறிகள் ஒரு திறன்பேசிச் செயலி வழியாக அனுப்பப்பட்டுவிடும். அறைகளில் வைக்கப்பட்டுள்ள அந்தத் திறன்பேசிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியும்.

தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நோயாளிகள் அத்திறன்பேசியைக் கொண்டு காணொளிக் கலந்துரையாடல் மூலம் அல்லது 'மைகேர் லைட்' செயலி மூலம் மருத்துவக் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

எஸ்ஜிஎச் தாதிமைப் பிரிவும் சுகாதார அமைச்சின் தகவல் தொடர்புப் பிரிவான ஒருங்கிணைந்த சுகாதாரத் தொடர்பு அமைப்புகளும் இணைந்து இந்த 'மைகேர் லைட்' செயலியை உருவாக்கியுள்ளன.

அந்தச் செயலி மூலமாக மருத்துவர்கள் அல்லது தாதியர், கூடுதலாக வேறு எந்தச் சாதனத்தின் துணையுமின்றி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளின் நிலைமையை மதிப்பிட இயலும்.

நோயாளிகள் நேரத்தைப் போக்க ஏதுவாக அந்தத் திறன்பேசிகளில் விளையாட்டுச் செயலிகளும் நிறுவப்பட்டுள்ளன.