சிங்கப்பூரர்கள் ஒற்றுமை காத்து, இணைந்து பணியாற்ற அதிபர் வலியுறுத்து

கொவிட்-19 நோய்ப் பரவலால் உலகம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், முன்னே உள்ள சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் இணைந்து பணியாற்றுவதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதும் அவசியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தி இருக்கிறார்.

பொதுத் தேர்தலில் வாக்கு அளிப்பு விகிதம் அதிகமாக இருந்தது சிங்கப்பூருக்கு நல்லது என்றும் தேர்தலில் வாக்களிப்பதை முக்கியமான ஜனநாயகக் கடமையாக சிங்கப்பூரர்கள் கருதுவதை அது காட்டுகிறது என்றும் அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல நெருக்கடிகளைச் சந்தித்து வந்தாலும் புத்தாக்க யோசனைகளுடன் மாற்றத்தை எதிர்கொண்டு புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள துணிவோருக்கு இன்னும் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக அதிபர் ஹலிமா குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், நாடு இந்த நெருக்கடியில் இருந்து விடுபட உதவிடவும் புதிய தீர்வுகளையும் உத்திகளையும் ஆராய்ந்து, நம் நாடு தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கவும் அனைவரும் கைகோக்க வேண்டியது அவசியம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரின் நலன் கருதி அரசியல் தலைவர்கள் பலரும் இணைந்து பணியாற்ற உறுதி கூறியிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் புதிய குழுவுடன் இணைந்து செயல் பட ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.