கிருமித் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் உணவகங்கள்

கிருமித் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் உணவகங்கள்

2 mins read
b462e2c8-7063-4d4b-8b68-f968671660b4
-

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு தாங்கள் காரணமாகிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் பலவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கிருமித் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக உணவு, பானக் கடைக்காரர்கள் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருவதாக சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அச்சங்கத்தில் 470க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்ட அறிவிப்புப் பலகைகளைக் கடையில் வைப்பது, உணவருந்திய பின் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை ஊழியர்கள் கடைப்பிடித்து வருவதாக பேச்சாளர் விவரித்தார்.

இதன் தொடர்பில் முத்து'ஸ் கறி உணவகத்தின் உரிமையாளர் அய்யாகண்ணு ஸ்ரீநிவாசன் (41), தமது உணவகத்தில் கடைப்பிடிக்கப்படும் கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

உணவகத்தினுள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்றும் 'சேஃப்என்ட்ரி' எனப்படும் வருகைப் பதிவுமுறையில் பதிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுகிறது.

உடல் வெப்பநிலைச் சோதனை, ஒரு மீட்டர் இடைவெளியுடன் மேசைகள், மின்னிலக்க முறையில் உணவு ஆர்டர் போன்றவற்றை உணவகம் கடைப்பிடிக்கிறது.

வாடிக்கையாளர்கள் காசாளரிடம் நிற்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி இருப்பது வலியுறுத்தப்படுகிறது. அத்துடன் ரொக்கமில்லா கட்டணமுறையைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

உணவகத்தை விட்டு வாடிக்கையாளர்கள் சென்ற பிறகு, அவர்கள் அமர்ந்த இடமும் சுத்தப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி உணவக ஊழியர்களும் 'சேஃப்என்ட்ரி' மூலம் தங்களின் வருகையைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அடிக்கடி உணவகத்தைச் சுத்தம் செய்து வருவதாகவும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது கிருமிநாசினியைக் கொண்டு உணவகத்தை நன்கு சுத்தம் செய்வதாகவும் திரு அய்யாகண்ணு கூறினார்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உணவகத்தின் கிருமித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.