வருடாந்திர நிகழ்வான அதிபர் சவாலுக்கு ஆதரவாக தேசிய தினக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டின் நிதித் திரட்டு இயக்கம், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. 'ஷேர் த கேர்' என்ற தலைப்பிலான இயக்கத்தை 'வாழ்வுக்காக குடும்பங்கள் மன்றம்' நேற்று தொடங்கி வைத்தது.
சிவப்பு, வெள்ளை நிறங்களில் அமைந்த சிறப்புப் பலகாரங்களையும் மின்-சமையல் குறிப்புப் புத்தகத்தையும் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை விற்பதன் மூலம் மன்றம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் பேக்கரி கடைகளிடமிருந்து பெறப்பட்ட சமையல் குறிப்புகளுடன் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் சமையல் குறிப்பு ஒன்றும் இந்த மின்-சமையல் புத்தகத்தில் இடம்பெறுகிறது.
"அதிபர் சவாலுக்கு நிதி திரட்ட எனது சொந்த தேசிய தின பாகு (Agar Agar) சமையல் குறிப்பை அளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
"இத்திட்டம் அர்த்தமுள்ள ஒன்று. குறிப்பாக இவ்வாண்டின் அதிபர் சவால், குறைபாடுகளுடைய நபர்களுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது," என்றார் திருவாட்டி ஹலிமா.
இருபதாவது ஆண்டாக நடைபெறும் இவ்வாண்டின் அதிபர் சவால், மொத்தம் 72 அமைப்புகளுக்காக நிதி திரட்டுகிறது.

