நோய்ப் பரவலுக்குரிய விழிப்புநிலை எச்சரிக்கை ஆரஞ்சாக இருக்கும் சமயத்தில், 18 வயது சாய் ஜியஸு கடைத்தொகுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே அமர்ந்திருந்த உணவக வாடிக்கையாளர்கள் மீது எச்சில் உமிழ்ந்தார். நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டார் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான சாய்.
பூகிஸ் ஜங்ஷனில் இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கும் விதமாக நடந்துகொண்டதன் தொடர்பில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இரு நண்பர்களுடன் மேல் மாடி தடுப்பருகே இருந்தபோது, கீழே எச்சில் உமிழ்வதைத் தன் நண்பர்கள் பார்த்து என்ன செய்வார்கள் என்பதை அறிய தான் இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. சாய் இச்செயலில் ஈடுபட்டபோது கீழே சுமார் 6, 7 வாடிக்கையாளர்கள் 'சப்வே' உணவகத்தில் அமர்ந்திருந்தனர். ஒரு நண்பர் பதிவு செய்த காணொளியை இணையத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து, சாய் பிடிபட்டார்.

