தனது பராமரிப்பில் விடப்பட்ட இரு குழந்தைகளுக்குப் பொருந்தாத மருந்துகளைத் தந்ததாக ச'ஆடியா ஜமாரி(படம்) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் பெரியவர்களுக்கான சளிக்காய்ச்சல் மருந்தை இரண்டில் ஒரு குழந்தைக்குக் கொடுத்ததாக போலிசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தது பொய் என்று நேற்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
ச'ஆடியா 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்தபோது, தன் பராமரிப்பில் இருந்த 5 மாதக் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது என்று கூறினார்.
குழந்தைக்கான மருந்து தன்னிடம் இல்லாததால் பெரியவர்க்கான மருந்து மாத்திரையை இரண்டாக உடைத்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
ஆனால், இது பொய் என்று நேற்று கூறிய ச'ஆடியா, போலிசார் தன்னை நச்சரித்ததால் எதையோ கொடுத்தேன் என்று சொல்ல வேண்டியிருந்தது என்றார்.
தன்னுடைய மருந்துகளை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்ததையும் நேற்று முன் தினம் அவர் மறுத்தார்.
சிங்கப்பூரரான 39 வயது ச'ஆடியா, வேண்டுமென்றே துன்பம் விளைவிக்கும் நோக்கில் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் நஞ்சூட்ட முயற்சித்தார் என்பதன் தொடர்பில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் வயது 5 மற்றும் 11 மாதங்கள்.
குழந்தைகள் இரண்டும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு குழந்தைகளையும் 2016ஆம் ஆண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் பார்த்துக்கொண்டதை அடுத்து, குழந்தைகளின் உடலில் பல்வேறு மருந்து வகைகள் கண்டு பிடிக்கப்பட்டன.
இவற்றில் பெரும்பாலும் மனநல சிகிச்சைக்குரியவை. குழந்தைகளின் உடலில் கண்டு பிடிக்கப்பட்ட அதே மருந்து வகைகள் ச'ஆடியாவின் உடலிலும் இருந்ததாகக் கூறப்பட்டது. ச'ஆடியா மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.

