கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பரிசோதனைக் கருவிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் உலகின் விலை மலிவான கொரோனா பரிசோதனைக் கருவியை டெல்லி ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் டெல்லி கிளையில் விலை மலிவான சோதனைக் கருவியை உருவாக்குதல், அதன்மூலம் குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு பரிசோதனை செய்தல் என்ற கோணத்தில் ஆய்வு நடைபெற்று வந்தது.
அதன் முடிவில் கிருமித் தொற்றை மிகத் துல்லியமாகக் கண்டறியும் பரிசோதனைக் கருவியை டெல்லி ஐஐடி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
'ஆர்.டி.-பிசிஆர்' என்ற செயல்முறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சோதனைக் கருவியைத் தயாரிக்க 650 இந்திய ரூபாய் மட்டுமே செலவாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நேற்றுஅவர் இந்தக் கருவியை அறிமுகம் செய்து வைத்தார். நியூடெக் மெடிக்கல் என்ற நிறுவனம் இக்கருவியை சந்தைப்படுத்த உள்ளது. இதற்கு 'க்ரோஷூர்' (CROSURE) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கருவி மூலம் மாதந்தோறும் 20 லட்சம் பேருக்கு கொவிட் 19க்கான பரிசோதனையைச் செய்ய இயலும் என கூறப்படுகிறது.

