சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், இந்த நிதி ஆண்டில் இடம்பெற இருந்த கட்டண உயர்வுகளை முடக்கி உள்ளது. கொவிட்-19 பாதிப்புகளைச் சமாளிக்க உதவும் வகையில் ஆணையம் இவ்வாறு முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டண முடக்கம், 2020 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31 வரைப்பட்ட காலத்துக்கு உரியதாக இருக்கும். இதனால் சுமார் 170 விமானப் போக்குவரத்துத் துறை நிறுவனங்களுக்கு மொத்தம் $200,000க்கும் மேற்பட்ட தொகை மிச்சமாகும்.
விமானங்களின் பகுதிப்பொருட்கள், விமானச் சாதனங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றுக்கான சான்றிதழ் அல்லது அங்கீகார நடைமுறையின்போது அவற்றைப் பரிசோதனையிடுவது, பரிசோதிப்பது, மதிப்பிடுவது ஆகியவற்றுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றுக்கான கட்டண உயர்வு முடக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
விமானங்களின் அல்லது விமானப் பகுதிப் பொருட்களின் பராமரிப்புக்கான சான்றிதழ் அல்லது அங்கீகார நடைமுறையின்போது இடம்பெறும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கான கட்டண உயர்வும் இருக்காது.
விமானம் அல்லது விமானப் பகுதிகளுக்கான பழுது நீக்குதல், பகுதிகளை மாற்றுதல், திருத்துதல் ஆகியவற்றுக்கான அங்கீ காரத்தை அல்லது சான்றிதழைப் புதுப்பிக்க செலுத்தவேண்டிய கட்டணத்தில் இடம்பெறவிருந்த உயர்வும் முடக்கப்பட்டு உள்ளது.

