சமூகத்தில் 11 பேர் உட்பட 248 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று

சமூகத்தில் 11 பேர் உட்பட 248 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று

2 mins read
355d6278-b76c-45aa-99f7-a13bd4aabc24
சமூகத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் கிருமி தொற்றியவர்களின் அன்றாட சராசரி வார எண்ணிக்கை 6லிருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி, கொவிட்-19 கிருமி புதிதாக 248 பேரைத் தொற்றி இருந்தது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,126 ஆகக் கூடியது.

புதிதாகக் கிருமி தொற்றியோரில் இரண்டு சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், வேலை அனுமதிச் சீட்டு உள்ள ஏழு பேர், சார்ந்து இருப்போர், அனுமதி பெற்று தங்கி இருந்த இரண்டு பேர் ஆகியோரும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. சமூகத்தில் மொத்தம் 11 பேர் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானார்கள்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த நால்வருக்குக் கிருமித்தொற்று இருந்ததை அடுத்து வீட்டிலேயே தங்கி இருக்கும்படி அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதிதாகக் கிருமி தொற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே, கொவிட்-19 நோயாளிகள் சென்று வந்த இடங்கள் அடங்கிய பட்டியலில் புதன்கிழமை ஆப்பிள் ஆர்ச்சர்ட் ரோடும் சேர்க்கப்பட்டது.

கிருமி தொற்றி உள்ளவர்கள் தேக்கா சென்டர், பூகிஸ்+ ஆகிய இடங்களுக்கும் சென்று வந்து இருக்கிறார்கள் என்று அமைச்சு குறிப்பிட்டது.

எண் 492 கேலாங் ரோடு முகவரியில் இருக்கும் டாட் ஃபோங் பாயிண்ட், எண் 20 ஃபிராங்கிள் டெரஸில் இருக்கும் செங் சியூ வா என்ற சிங்கப்பூர் ஃபூல்ஸ் நிறுவனத்தின் கடை, எண் 41 நோரிஸ் ரோடு முகவரியில் இருக்கும் ஆல் இந்தியா சூப்பர் மார்கெட் கடை ஆகியவை கிருமித்தொற்று உள்ளவர்கள் சென்று வந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இத்தகைய இடங்களுக்கு யாராவது சென்று வந்திருந்தால் அவர்கள் தங்கள் உடல்நிலையை மிகக் கவனமாக கண்காணித்து வரவேண்டும். என்றாலும் அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு இருக்கும் என்பதால் இவற்றுக்குச் சென்று வருவதை தவிர்க்க வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.

புதன்கிழமை 251 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 42,974 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். இன்னமும் 159 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர். சமூக இடங்களில் 3,704 பேர் தேறி வருகிறார்கள். தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் யாரும் இல்லை. கொவிட்-19 பிரச்சினை காரணமாக 27 பேர் மாண்டு இருக்கிறார்கள்.

கொவிட்-19 கிருமி தொற்றி இருந்த நிலையில் 14 பேர் வேறு காரணங்களால் மரணம் அடைந்துவிட்டார்கள்.

இதனிடையே, சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மறுபடியும் தொற்று இல்லை என்று தேசிய தொற்றுநோய் நிலையம் நேற்று தெரிவித்தது.