அறிவியல் நிலையமும் (The Science Centre) அதனுடன் தொடர்புடைய இதர இடங்களும் இன்று முதல் கதவுகளைத் திறக்கின்றன.
உறைபனி நகர் (Snow City) கிட்ஸ்டாப் (KidsSTOP) என்ற சிறார் அறிவியல் உலகம் முதலானவை அவற்றில் அடங்கும். கொவிட்-19 காரணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இவை மூடப்பட்டன.
ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று அவை திறக்கப்படுகின்றன. அறிவியல் நிலையமும் கிட்ஸ்டாப் மையமும் ஜூலை 26 வரை அன்றாடம் முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும் என்று அறிவியல் நிலையம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஜூலை 20 முதல் ஒரு வாரகால பள்ளிக்கூட விடுமுறை தொடங்குகிறது. இதற்கு முன்பாக அந்தப் பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்படுகின்றன.
அறிவியல் நிலையத்தில் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். சிறார் அறிவியல் மையத்தில் ஒரு நேரத்தில் 100 பேருக்கு அனுமதி கிடைக்கும்.
பள்ளிக்கூட விடுமுறைக்குப் பிறகு அறிவியல் நிலையமும் சிறார் அறிவியல் மையமும் ஜூலை 31 முதல் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரையில் வாரம் மூன்று நாட்கள் முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.
ஸ்னோ சிட்டி உறைபனி நகர் என்பது உள்ளரங்கு ஆகும்.
அங்கு பனி உறைந்து இருக்கும். வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் குறைவாக இருக்கும்.
இந்தக் கேளிக்கை நகர் ஜூலை 17 முதல் ஜூலை 26 வரை பள்ளி விடுமுறை நாட்களில் நாள்தோறும் முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும். எந்த ஒரு நேரத்திலும் இங்கு 50 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

