கொவிட்-19 உலகில் தலை எடுக்கத் தொடங்கிய நேரத்தில், அதாவது கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி சிங்கப்பூர் விலங்கு காட்சிசாலையில் போஸ்கோ-மின்னி என்ற அரிதான லெமுர் விலங்கு இனத் தம்பதிக்கு அழகான இரட்டைக் குட்டிகள் பிறந்தன.
போஸ்கோ, மின்னி என்ற தம்பதிக்குப் பிறந்த இரு குட்டிகளுக்கும் இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.
ஜூலை 6ஆம் தேதி விலங்கு காட்சி சாலை திறக்கப்பட்டது முதல் இவை பார்வையாளர்களை வரவேற்று வருகின்றன. குட்டிகள் இரண்டும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து உணவு உண்பதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்கிறார்கள்.
குட்டிகளுக்குத் தந்தையான போஸ்கோ இங்கேயே பிறந்து வளர்ந்த பிராணி. அதற்கு இப்போது வயது 11 ஆகிறது.
இந்த வயதில் இரட்டை பிள்ளைகளுக்கு முதல்தடவையாக போஸ்கோ தந்தையாகி இருக்கிறது. போஸ்கோவின் ஜோடியான மின்னிக்கு வயது 8. இது ஜப்பானில் இருந்து இங்கு வந்தது.
இந்த வகை லெமுர் விலங்குகள் ஆண்டுக்கு ஒரு முறைதான் இனப்பெருக்கம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு மட்டுமின்றி, பெண் விலங்கு பாலியல் வேட்கையுடன் இருக்கும் ஓரிரு நாட்களில் ஒரு நாளில் மட்டுமே கருவுறும் நிலையில் இருக்கும்.
ஆகையால் இப்போது இரட்டைக் குட்டிகள் பிறந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது.

