சிங்கப்பூரில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் பற்றி சுயேச்சையான புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வாக்களிக்க வந்த மாது ஒருவர் தவறுதலாக வாக்களிக்காமல் தடுக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட தவறுகள், தடுமாற்றங்கள், தவறான வழிகாட்டல்கள் ஆகியவை தேர்தலின் போது இடம்பெற்றதாக அந்தக் கட்சி தெரிவித்தது.
வாக்களிப்பு நாளன்று ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் வாக்களிக்கச் சென்ற திருவாட்டி லம் என்ற ஒரு மாது, மனிதத் தவறு காரணமாகவும் தகவல் தொடர்பு குறைபாடு காரணமாகவும் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது என்று தேர்தல் துறை முன்னதாகத் தெரிவித்து இருந்தது.
திருவாட்டி லம் ஏற்கெனவே வாக்களித்துவிட்டதாக அந்த வாக்குச்சாவடியில் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஒருவரின் வாக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுவிட்டதாக பதிவேட்டில் காட்டப்பட்ட போதிலும் அவர் தான் வாக்களிக்கவில்லை என்று கூறி வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கும்போது அவருக்கு கொடுக்கப்படும் 'நகல் வாக்குச் சீட்டை' பிறகு அந்த மாது பூர்த்தி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
"வாக்களிப்பின்போது இப்படி எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதை தெரிவிக்குமாறு நாங்கள் தேர்தல் துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.
"அதோடு, தேர்தல் நடத்தப்பட்ட விதம் பற்றி சுயேச்சையான புலன்விசாரணை தேவை என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்," என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் பங்கெடுத்துக்கொண்ட எல்லா அரசியல் கட்சிகளும் அத்தகைய விசாரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாரவர்.
வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை, கையுறைகள் தொடர்பான நிபந்தனைகளில் மாற்றம் முதல் வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட்டது வரை பலவும் இடம்பெற்று, இந்தத் தேர்தலில் தவறுகள், தடுமாற்றங்கள், தவறான வழிகாட்டல்கள் ஆகியவை இடம்பெற்று இருந்ததாக அவர் தெரிவித்தார்.

