கடைகளுக்கான வாடகை மேலும் குறையலாம்

கடைகளுக்கான வாடகை மேலும் குறையலாம்

2 mins read
3c701e82-142b-4bf0-ab92-6e9e0484d545
2020 முழுவதற்கும் ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரம் மற்றும் இதர நகர்ப் புறங்களில் வாடகை சுமார் 10% வரை குறையும் என்றும் புறநகர்ப் பகுதிகளில் இது 5% அளவுக்கு இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது. படம்: எஸ்டி, ஜின் தே -

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகக் கடைகளுக்கான வாடகை இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் மிக அதிகமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு காரணமாக கடைத்தொகுதிகளில் காலியாகிவிட்ட கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம் என்று சொத்துத் துறை ஆலோசனை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இரண்டு மாதம் நடப்பில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து பெரும்பாலான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.

என்றாலும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் இன்னமும் நடப்பில் உள்ளன. இதன் காரணமாக உணவு, பானம், சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற கடைகளும் நிறுவனங்களும் முழுமூச்சில் செயல்பட முடியாத நிலை இன்னமும் இருக்கிறது.

இதன் காரணமாக பல நிறுவனங்கள் நிரந்தரமாக தொழிலை முடித்துக் கொண்டுவிட்டன என்று குஷ்மன் & வேக்ஃபீல்டு என்ற அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

இவற்றின் விளைவாக புறநகர் பகுதிகளில் இருக்கும் கடைத்தொகுதிகளில் காலி இடங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 இரண்டாவது பாதியில் சில்லறை வர்த்தகச் சந்தை முற்றிலும் மிகவும் இறங்குமுகமாக இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கான ஆய்வுத் துறைத் தலைவர் கிறிஸ்டின் லி அறிக்கை ஒன்றில் கூறினார்.

இப்போது கட்டட உரிமையாளர்கள், கொவிட்-19க்கு முன்பு இருந்த வாடகையையே வசூலித்து வருகிறார்கள். ஆனால் காலி இடங்கள் அதிகரிக்கும்போது உரிமையாளர்களும் அதற்கேற்ப நீக்குப்போக்குடன் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் என்றார் அந்த அதிகாரி.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாவது காலாண்டில் முக்கியமான இடங்களில் உள்ள சில்லறை வர்த்தக கடைகளின் வாடகை குறைந்தது.

2020 முழுவதற்கும் ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரம் மற்றும் இதர நகர்ப் புறங்களில் வாடகை சுமார் 10% வரை குறையும் என்றும் புறநகர்ப் பகுதிகளில் இது 5% அளவுக்கு இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.