அங் மோ கியோ நகர மன்றத்தின் முன்னாள் பொது நிர்வாகிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 27 மாத சிறைத் தண்டனை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட காலத்திற்கு சிறை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 64 வயது சியா சின் லான் என்பவரிடமிருந்து 86,000 வெள்ளிக்கு மேல் லஞ்சம் பெற்ற முன்னாள் நிர்வாகியான 59 வயது வோங் சீ மெங்குக்கு தண்டனை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஏற்றுக் கொண்டார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வோங் சீ மெங்குக்கு சிறைத் தண்டனை 39 மாதங்களுக்கு உயர்த்தப்பட்டது.
அவருக்கு வெவ்வேறு சமயங்களில் லஞ்சம் வழங்கிய சியாவுக்கும் சிறைத் தண்டனை 21 மாதங்களிலிருந்து 33 மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தரேஷ் மேனன், பொது அல்லது அரசாங்க அமைப்புகளின் குத்தகை தொடர்பான ஊழல் வழக்கில் எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கியிருந்தார்.
குற்றச்செயல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு. அதற்கு காரணமானவர்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்தது, குற்றம்புரிந்தவர் குற்றச்செயல்களை ஒப்புக்கொண்டாரா போன்ற அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் உள்விவகார ரகசியங்களை அறிந்த சியாவிடமிருந்து வோங் கணிசமான அளவு ஆதாயம் அடைந்ததையும் நம்பிக்கையான பொறுப்பில் இருந்த வோங் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்;
சட்டப்படி இத்தகைய குற்றச் செயல்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 100,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும்.
2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையில் அங் மோ கியோ நகர மன்றத்தில் வோங் பொது நிர்வாகியாக பணியாற்றியபோது வழங்கப்பட்ட ஒப்பந்தக் குத்தகை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அடுத்த மாதமே வோங் பதவியிலிந்து அகற்றப்பட்டார். பின்னர் அவரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சியாவிடம் அவருக்கு இருந்த ரகசிய கூட்டு தெரியவந்தது.
அங் மோ கியோ நகர மன்றத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்ட 19-ஏஎன்சி எண்டர்பிரைஸ், 19-என்எஸ்2 எண்டர்பிரைஸ் ஆகிய இரு நிறுவனங்களின் இயக்குநரான சியா அவருக்கு பல்வேறு சமயங்களில் லஞ்சம் வழங்கியிருந்தார்.
வோங்குக்கு சியா 13,500 வெள்ளி கழிவுடன் டொயோட்டா கொரோலா ஆல்டிஸ் காரை விற்றது, இருவரும் சேர்ந்து கரவோக்கே, உடற்பிடிப்பு நிலையங்களுக்குச் சென்று 34,000 வெள்ளி யைச் செலவழித்தது, வோங்கின் கள்ளக்காதலிக்கு சியா 27,800 வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

