சிங்கப்பூர் நீரிணையில் ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இத்தகைய சம்பவங்கள் இரட்டிப்படைந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை 16 ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவங்கள் பதிவாகின.
அவற்றில் 13 சம்பவங்கள் கிழக்கு நோக்கிச் செல்லும் கடற்பாதையில் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிழக்கு நோக்கிச் செல்லும் கடற்பாதையில் எட்டு கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்தன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆசிய நாடுகளின் கடற்பகுதிகளில் கடற்கொள்ளை, ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவங்கள் ஆகியவை அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த அரையாண்டு புள்ளிவிவரங்களை ஆசியாவில் கடற்கொள்ளை, கப்பல்களுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான வட்டார ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கான தகவல் பகிர்வு மையம் நேற்று வெளியிட்டது.
பெரும்பாலான குற்றங்கள் சிறிய குற்றங்களாக இருந்தபோதிலும் அவற்றை எதிர்கொள்ளவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என்று மையம் எச்சரித்தது.

