எம்ஆர்டி ரயிலில் சட்டத்துக்குப் புறம்பாக மின்-சிகரெட் பிடித்ததுடன் அச்செயலின் காணொளிப் பதிவை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த மூன்று இளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்-சிகரெட்டைப் பயன்படுத்திய 18 வயது இளையருக்கு $500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
மின்கலத்தால் இயங்கக்கூடிய மின்-சிகரெட்டுக்குள் உள்ள 'வேப் ஜூஸ்' எனும் திரவத்திலிருந்து வெளியாகும் புகையை மின்-சிகரெட் பிடிப்பவர் உள்ளிழுத்துக் கொள்வார். அந்தப் புகையில் நிக்கோட்டின் கலந்திருக்கும்.
இதே குற்றத்தைப் புரிந்த 16 வயது பெண்ணுக்கு $200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புலனாய்வின்போது தவறான தகவல் அளித்ததற்காகவும் ஒரு பாக்கெட் சிகரெட்டை வைத்திருந்ததற்காகவும் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அக்கும்பலின் மூன்றாவது நபரான 13 வயது பெண்ணுக்கு மின்-சிகரெட்டைப் பயன்படுத்தியதற்காக நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரயிலில் புகைப்பது தடை செய்யப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் அந்த இளையர்கள் பயணிகள் முன்னிலையில் வெளிப்படையாக மின்-சிகரெட் பிடித்தது மட்டுமல்லாமல் அந்தக் காணொளியைத் தைரியமாக இணையத்தில் பதிவேற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது," என்றும் ஆணையம் கருத்துரைத்தது.
அந்த இளையர்களுக்கு தலா $2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

