மூத்த தூதர் டோனி கமால் சித்திக் மாரடைப்பின் காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு 80 வயது.
கரிபியன் சமூகத்திற்கான சிங்கப்பூரின் பேராளராகவும் இதற்கு முன்னதாக வட துருவ விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் பணியாற்றிய திரு சித்திக், கிரீஸ், சுவீடன், இத்தாலி, ஃபின்லாந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளிலும் சிங்கப்பூரின் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
1996ல் குடியியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அவர், தனியார் துறைக்குச் சென்று உத்திபூர்வ ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் நிர்வாக இயக்குநராகப் பணியாறினார். திரு சித்திக் "புகழ்பெற்ற வெளிநாட்டுச் சேவை அதிகாரி" என்றும் "மிக உன்னதமான செயல்திறன் மிக்கவர்" என்றும் பாராட்டிய மத்தியக் கிழக்கு ஆய்வுக்கழகத்தின் தலைவர் திரு பிலஹரி கௌசிகன், இவரிடமிருந்து ஒரே தலைமுறையைச் சேர்ந்த தூதுவர்கள் தங்களது வேலையைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
சாத்தியமாகாத வேலைகளை நிறைவேற்றுவதற்கான தேவை எழுந்தால் வெளியுறவு அமைச்சில் நிரந்தர செயலாளராகப் பணியில் இருந்தபோது முன்னைய அதிபர் எஸ்.ஆர்.நாதன் திரு சித்திக்கின் ஆலோசனையை நாடுவார் என்று திரு பிலஹரி கௌசிகன் தெரிவித்தார்.
சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் திரு சித்திக்கின் நல்லுடல் இன்று பிற்பகல் புதைக்கப்பட்டது. அவர் தமது மனைவி ஷெரனையும் இரண்டு மகள்கள் சோபியா மற்றும் சமீராவையும் பேத்திகள் மிஷா மற்றும் ரோக்சியையும் விட்டுச் சென்றுள்ளார்.

