தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலப் பிரச்சினைகளை சந்திக்கும் இளையர்களுக்கு உதவ $1 மில்லியன் நிதி

2 mins read
4a2c5262-8ec5-4835-869c-91f17ec8ad6e
தொடக்கவிழாவில் கலந்துகொண்ட (இடமிருந்து) திரு மார்ட்டின் டான் (தி மஜுரிட்டி டிரஸ்ட்), திரு அல்வின் லிம் (முசிம் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் செயல் இயக்குநர்), திரு டிலேன் லிம் (நிறுவனர், கேரக்டர் அண்ட் லீடர்‌ஷிப் அகாடமி), சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ. படம்: அல்ஃபோன்சஸ் செர்ன். -

சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கும் புதிய நிதி தொடங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக நேற்று இணையம்வழி நடத்தப்பட்ட 12வது உலக இளையர் மாநாட்டில், செம்பனை எண்ணெய் நிறுவனமான 'முசிம் மாஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் வழங்கிய 1 மில்லியன் வெள்ளி நன்கொடையின் பலனாக 'முசிம் மாஸ் புளூஸ்டார் ஃபண்ட்' எனும் இந்த நிதி தொடங்கப்பட்டுள்ளது.

மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்கான திட்டங்களை நடத்தும் லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கான மானியங்களை வழங்க முசிம் மாஸ் ஹோல்டிங்ஸ், 'தி மெஜூரிட்டி டிரஸ்ட்' என்ற நன்கொடை அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

"மனநலம் மற்றும் உளவியல் நலனைப் பற்றி இளையர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.

"என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது குறித்து அவர்களில் பலர் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்," என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

திறன், அறிவைக் கொண்டு காரியங்களை முடிக்கும் ஆற்றலைப் பெற இளையர்கள் விரும்புவதால் இந்த நிதியம் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் என்றும் திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்காக 1 மில்லியன் வெள்ளியை நன்கொடை வழங்கியது தனிப்பட்ட முடிவு என்று முசிம் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் செயல் இயக்குநருமான அல்வின் லிம் தெரிவித்தார்.

தமக்கு 19 வயதாக இருந்தபோது தமது நண்பர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், மனநலப் பிரச்சினை தொடர்பான எதிர்மறை போக்குகளைக் களைவதற்கான நோக்கத்தைத் தமக்கு ஏற்படுத்தியதாக திரு லிம் நினைவுகூர்ந்தார்.

கொவிட்-19 நோய் பரவி வரும் தற்போதைய சூழலில், மனநலம் தொடர்பான ஆதரவு நல்குவதற்கான அவசரம் ஏற்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் லீ தெரிவித்தார்.

தேசிய இளையர் மன்றம் அண்மையில் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற 16 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட 1,500 பேரில் கிட்டத்தட்ட பாதிப் பேர், கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் தங்களது மனநலம் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதை திரு அல்வின் லிம் சுட்டினார்.