இஸ்லாமிய சமயத்தில் தற்காலிகமாக குழந்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது குறித்த கருத்தரங்கில் நேற்று 50க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டனர்.
'இஸ்லாமும் குழந்தை வளர்ப்பும்' என்ற தலைப்பில் மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட அந்த மெய்நிகர் கருத்தரங்கில் சமய நிபுணர்கள், வளர்ப்புப் பெற்றோர், சமூக ஊழியர்கள் ஆகியோரிடம் பங்கேற்பாளர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டனர்.
எடுத்துக்காட்டாக, வீட்டில் வளர்ப்புப் பிள்ளைகளைப் பராமரிக்கும்போது இஸ்லாமிய சட்டத்தின்படி தாங்கள் முக்காடு அணிய வேண்டுமா என்பது பற்றி பெண்கள் சிலர் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) முஃப்தி அலுவலக துணை இயக்குநரான உஸ்தாத் இர்வான் ஹாடி, இத்தகைய பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக பொறுப்பு வகிப்பதால் வீட்டில் அவர்கள் முக்காடு அணிய வேண்டியதில்லை என்று கூறினார்.
சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான் மற்றும் சமய ஆசிரியர் சங்கத்தின் (பெர்காஸ்) பங்காளித்துவத்துடன் சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்த 'பிபிஐஎஸ் ஓஏசிஸ்' என்ற அமைப்பு இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 80க்கும் அதிகமான வளர்ப்புப் பெற்றோருக்கு ஆதரவளித்து வருகிறது.
"வளர்ப்புப் பெற்றோர் பொறுப்பை ஏற்க சமூகத்தில் மேலும் பலரும் முன்வர இந்தக் கருத்தரங்கு அவர்களுக்கு ஊக்கம் தரும் என நாங்கள் நம்புகிறோம்," என்று பிபிஐஎஸ் தலைவர் ரஹாயு முகம்மது கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்புப் பெற்றோரால் பராமரிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
துன்புறுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பிள்ளைகள் பலரை சிறார் இல்லங்களில் வைப்பதற்குப் பதிலாக வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த நிலை சாத்தியமானது.
கடந்த ஆண்டு 545 பிள்ளைகள் வளர்ப்புப் பெற்றோரால் பராமரிக்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டில் பராமரிக்கப்பட்ட 535 பிள்ளைகளைவிடவும் 2015ல் பராமரிக்கப்பட்ட 362 பிள்ளைகளைவிடவும் இந்த எண்ணிக்கை அதிகம். இத்தகைய பிள்ளைகள் குழந்தைகள் முதல் 18 வயது வரை உடையவர்களாவர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளரான இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம், நேற்றைய கருத்தரங்கில் பங்கேற்றார். வளர்ப்புப் பெற்றோர் பொறுப்பில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் ஆர்வம் காட்டுவது தமக்கு மகிழ்ச்சி தருவதாக அவர் சொன்னார்.
"வளர்ப்புப் பெற்றோராக பொறுப்பு ஏற்பது குறித்து மேலும் பலரிடம் செய்தியைப் பரப்புமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும் வாழ்வில் நல்லதொரு தொடக்கத்தை நம்மால் தர முடியும்," என்றார் அவர்.

