கொவிட்-19 கொள்ளைநோய் சிரமத்திற்கு இடையே சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள் தங்களது ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேலும் $4 பில்லியனை வழங்கி உதவுகிறது.
வேலை ஆதரவுத் திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த உதவித்தொகையை சுமார் 140,000 முதலாளிகள் ஜூலை 29 முதல் பெற்றுக்கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 1.9 மில்லியன் உள்ளூர் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வர்த்தகங்களுக்கு இத்தொகை கைகொடுக்கும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்த வழங்குதொகையையும் சேர்த்தால் உதவித்தொகையின் அளவு $15 பில்லியனைக் கடக்கும் என சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துடன் இணைந்து நிதி அமைச்சு கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டம் மூன்று வரவு-செலவுத் திட்டங்கள் மூலம் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ள $20 பில்லியனில் ஒரு பகுதி. ஏற்கெனவே இதேபோல 140,000க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு கடந்த மே 28ஆம் தேதி முதல் $4 பில்லியன் தொகை வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் வேலை ஆதரவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒவ்வோர் உள்ளூர் ஊழியரின் $4,600 வரையிலான மாதச் சம்பளத்தில் 75% வரை ஈடுகட்ட இத்திட்டம் சலுகை அளிக்கிறது.
கொள்ளைநோய் காரணமாக ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து மற்றும் பயணத்துறைகளுக்கு மேலும் அதிகமான ஆதரவை இத்திட்டம் வழங்கும். இப்போது அளிக்கப்படும் வழங்கு தொகை பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான உள்ளூர் ஊழியர் சம்பளத்திற்கு ஆதரவு வழங்கும் என கூட்டறிக்கை குறிப்பிட்டது.
அத்துடன், ஏப்ரல் மாதத்தில் நோய்ப் பரவல் தடுப்புக்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது வழங்கப்பட்ட சம்பளத்தின் 75 விழுக்காட்டையும் நிறுவன முதலாளிகள் பெறுவர்.
இந்த வழங்குதொகை கடந்த ஆண்டு அக்டோபர் மாத சம்பளக் கணக்கின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்தில் கொடுக்கப்பட்ட சரியான சம்பள த்தொகை அடுத்துவரும் வழங்குதொகையில் சரிக்கட்டப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதியுள்ள முதலாளிகளுக்கு அவர்கள் பெறக்கூடிய தொகை குறித்து கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துடன் 'பேநவ் கார்ப்பொரேட்' அல்லது 'ஜைரோ' ஏற்பாடுகளை செய்துள்ளோர் ஜூலை 29 முதல் வழங்குதொகையைப் பெறுவர்.
மற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் காசோலைகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், முதலாளிகள் தங்களது ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள இயன்றவரை அதிகமாக முயற்சி எடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
வர்த்தகங்களின் பணிகளை உருமாற்றவும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும் முதலாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

