பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி, மேரிமவுண்ட் தனித்தொகுதிக்குச் சேவையாற்றும் புதிய நகர மன்றம் உதயம்

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி, மேரிமவுண்ட் தனித்தொகுதிக்குச் சேவையாற்றும் புதிய நகர மன்றம் உதயம்

2 mins read
dcd40f2e-90fc-45bb-a50a-2f5ae6c75c41
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் இங் எங் ஹென் உட்பட நால்வரும் மேரிமவுண்ட் தனித்தொகுதியில் வெற்றி பெற்ற திருவாட்டி கான் சியாவ் ஹுவாங்கும் நேற்று பீஷான் ஸ்திரீட் 11ல் உள்ள 151வது புளோக்கில் இருக்கும் காப்பிக் கடையில் மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதிக்கும் மேரிமவுண்ட் தனித்தொகுதிக்கும் சேவையாற்றுவதற்காக ஒரு புதிய நகர மன்றம் அமையும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று அறிவித்தார்.

மேரிமவுண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற திருவாட்டி கான் சியாவ் ஹுவாங், 45, அந்தப் புதிய மன்றத்தின் இரு துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று டாக்டர் இங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

புதிதாக அமையும் பீஷான்-தோ பாயோ நகர மன்றத்தின் தலைவராக திரு சோங் கீ ஹியோங், 54, சேவையாற்றுவார். திரு சக்தியாண்டி சுபாட், 46, இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முந்தைய நகர மன்றத்தில் தாங்கள் வகித்த பதவிகளை மீண்டும் வகிக்கிறார்கள்.

செலவைச் சிக்கனப்படுத்தி, உயர்தர பராமரிப்பைக் கட்டிக்காக்கும் வகையில் மேரிமவுண்ட், பீஷான், தோ பாயோ மக்களுக்கு அதே நகர மன்றமே தொடர்ந்து சேவையாற்றும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் இங் மற்றும் திருவாட்டி கான் ஆகியோர் உறுதி கூறினர்.

மேரிமவுண்ட் தனித்தொகுதியில், பீஷான் ஸ்திரீட் 22 முதல் 25 வரை உள்ள வீவக புளோக்குகளும் ஷூன்ஃபூ பகுதியும் சின் மிங்கில் ஒரு பகுதியும் உள்ளடங்கும்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியில் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டன.

மேரிமவுண்ட் தனித்தொகுதியில் திருவாட்டி கான் வென்றார்.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியை டாக்டர் இங் தலைமையிலான மசெக அணி மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இதர நான்கு உறுப்பினர்களுடன் டாக்டர் இங் நேற்று இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உலா சென்று மக்களுக்கு நன்றி கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றும் முயற்சியாக தாங்கள் இந்தக் குழுத்தொகுதியிலும் மேரிமவுண்ட் தனித்தொகுதியிலும் பணிகளைத் தொடங்கிவிட்டதாக டாக்டர் இங் கூறினார்.

அதேவேளையில், மேரிமவுண்ட் குடியிருப்பாளர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் நலன்களைப் பாதுகாக்க மிக மும்முரமாக பணியாற்றப்போவதாக திருவாட்டி கான் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

இவர் ஜூலை 14ஆம் தேதி தன்னுடைய முதலாவது மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஸூம் செயலி மூலம் நடத்தினார். அதில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் குடியிருப்புப் பேட்டை பராமரிப்பு, வேலை ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளுடன் தன்னை அணுகியதாக அவர் தெரிவித்தார்.

முந்தைய தேர்தலைவிட இந்தப் பொதுத் தேர்தலில் மசெக குறைவான வாக்குகளைப் பெற்றதற்கு என்ன காரணம் என்பது பற்றி டாக்டர் இங், திருவாட்டி கான் இருவரும் கருத்துரைக்கவில்லை.