சிங்கப்பூர் மாணவரான ஜோனத்தன் மோக், 23, (படம்) என்பவரை லண்டன் நகரில் இனவெறி அடிப்படையில் தாக்கியதாக கூறப்பட்டதன் தொடர்பில் 15 வயதுப் பையன் மீது லண்டன் மாநகர் போலிஸ் குற்றம் சுமத்தியது.
நோக்கமின்றி கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறது என்று போலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்ட பதின்ம வயது பையன் ஆகஸ்ட் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார். இந்த விவகாரம் தொடர்பில் மார்ச் 4ஆம் தேதி கைதான 16 வயது பதின்ம வயதுப் பையன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக போலிஸ் தெரிவித்தது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படிக்கும் திரு மோக், மார்ச் 3ஆம் தேதி இரவு சுமார் 9.15 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இளையர்கள் சிலர், தன்னைப் பார்த்து 'கொரோனா கிருமி' என்று கூறியதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
அவர்களை எதிர்நோக்க திரு மோக் தயாரானபோது அவர் முகத்தில் குத்தப்பட்டதாகவும் அப்போது அந்தச் சந்தேகநபர்களில் ஒரு பையன், 'எங்கள் நாட்டில் உங்கள் கொரோனா கிருமி பரவுவதை நான் விரும்பவில்லை' என்று கூறியதாகவும் பிறகு அந்த இளைஞர்கள் ஓடிவிட்டதாகவும் திரு மோக் தெரிவித்தார்.

