வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருந்தது என்பது பற்றி அந்த ஊழியரின் முதலாளியிடம் தெரியப்படுத்த மூன்று வார காலம் தாமதமாகி விட்டதற்காக சுகாதார அமைச்சும் மனிதவள அமைச்சும் நேற்று கூட்டறிக்கை ஒன்றில் மன்னிப்புக் கேட்டன.
இந்த நிர்வாகக் குறைபாடு இடம்பெற்ற போதிலும் அந்த ஊழியர் தங்கியிருந்த 'தோ குவான் டார்மிட்டரி' என்ற தங்கும் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கைகளிலும் அந்த விடுதியைச் சேர்ந்த எல்லா ஊழியர்களுக்கான சிகிச்சைகளிலும் பராமரிப்பிலும் எந்தவொரு குறைபாடும் இல்லை என்றது கூட்டறிக்கை.
தோ குவான் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஓர் ஊழியருக்கு கொவிட்-19 தொற்று இருந்தபோதிலும் அந்த விடுதியில் தனது அறையில் இதர 11 பேருடன் தொடர்ந்து அவர் தங்கி இருந்ததாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பி லான கேள்விகளுக்கு அளித்த பதிலில் அமைச்சுகள் இவற்றைத் தெரிவித்துள்ளன.

