பூகிஸ் பிளஸ் திரையரங்கு செங்காங் வட்டாரத்திலுள்ள ப்ரன்வேல் ஸ்கொயரிலுள்ள ஆக்டிவ்எஸ்ஜி உடற்பயிற்சிக்கூடம், வீவோசிட்டி ஆகிய இடங்களுக்கு கொரோனா நோயாளிகள், பிறருக்கு இந்நோயைப் பரப்பக்கூடிய நிலையில் இருக்கும்போது சென்றிருந்த பல்வேறு இடங்களில் சில என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சொங்பாங் சிட்டி ஈரச்சந்தை மற்றும் உணவு நிலையம், கம்போங் அட்மிரல்டி உணவங்காடி நிலையம், தி மெட்ரபோலிஸ் உள்ளிட்ட இடங்களும் சுகாதார அமைச்சின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கொரோனா நோயாளிகள் பிறருக்கு இந்நோயைப் பரப்பக்கூடிய நிலையில் குறைந்தது 30 நிமிடங்களுக்கு சென்றிருந்த இடங்களையும் அவர்கள் எந்த நேரத்தில் சென்றனர் என்பதையும் காட்டும் பட்டியல் சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் உள்ளது.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்குத் தகவல் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களைத் தவிர்ப்பதற்கான அவசியம் இல்லை என்றும் அவை சுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.

