எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தனது பேருந்து ஓட்டுநர்களுக்கு சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் தடுப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. சேவை எண் 19, 28, 147, 196, 198, 249 ஆகிய பேருந்துகளில் பிளாஸ்டிக் தடுப்புகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
பேருந்து ஓட்டுநரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் தடுப்பு, கொரோனா கிருமிப் பரவல் காலத்தில் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கண்டறிவதற்காக இரண்டு வார காலம் பரிசோதனை முயற்சியாக இது அறிமுகம் செய்யப்படுவதாக அந்த நிறுவனம் இன்று விளக்கியது.
இந்தத் தடுப்புகள் 'போலிகார்பனேட்' எனப்படும் கடின பிளாஸ்டிக் பொருளால் ஆனது எனக் கூறிய அந்த நிறுவனம், கொரோனா கிருமிப் பரவலை தடுக்கும் நோக்கத்துடன் பயணிகள், ஓட்டுநர்களுக்கு இடையிலான தொடர்பை முடிந்த அளவு குைறப்பது திட்டம் என்று தெளிவுபடுத்தியது.
கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சிகளில் இருப்பதுபோல், சிறிது மாற்றங்களுடன் இந்த பிளாஸ்டிக் தடுப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பேருந்து ஓட்டுநர்களை சுற்றி இந்தத் தடுப்பு போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டில் உள்ள ஒரு திறந்த பகுதிவழி ஓட்டுநர் பேருந்தின் இடது பக்க கண்ணாடியைப் பார்க்கலாம்.
அத்துடன், இதில் தடுப்பைத் திறந்துகொண்டு ஓட்டுநர் வெளியே வந்து உதவி தேைவப்படும் பயணிகளுக்கு உதவவும் வழி உள்ளது.
மேலும், ஒளிக்கதிர்களால் பேருந்து ஓட்டுநர்களின் கவனம் திசைதிருப்பப்படாமல் இருக்க பிளாஸ்டிக் தடுப்பில் மெல்லிய, பார்வையை மறைக்காத உறையும் போடப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் தடுப்புகள் கம்ஃபர்ட்டெல்கிரோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'மூவ் மிடியா'வால் தயாரிக்கப்பட்டுள்ளது.
"எங்கள் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் அன்றாட பணியில் முதல்நிலை சேவையாளர்களாக உள்ளனர்.
"கொரோனா கிருமி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாத ஒரு நிச்சயமற்ற சூழலில், ஓட்டுநர்களுக்கான இந்த பிளாஸ்டிக் தடுப்பு ஒரு நல்ல யோசனை என நினைக்கிறோம்," என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் தற்காலிக தலைமை நிர்வாகியான செங் சியக் கியன் கருத்துரைத்து உள்ளார்.

