வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய தினத்தன்று வேலை செய்ய வேண்டியிருந்தாலும் இவ்வாண்டு தேசிய தின அன்பளிப்புப் பை தனது குடும்பத்துக்குக் கிடைத்தது உற்காகமளிக்கிறது என்றார் உணவுக்கடை ஊழியரான திரு ஸோ ஜிஹி.
சீனாவிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தாலும், நிரந்தரவாசி என்ற முறையில் அவருக்கு தேசிய தின அன்பளிப்புப் பை கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை என்றார் 42 வயது திரு ஸோ. அவர் இன்று சுவா சூ காங்கில் உள்ள கியட் ஹோங் சமூக மன்றத்தில் தனது அன்பளிப்பைப் பையைப் பெற்றுக்கொண்டார்.
இரண்டு வாரங்களுக்கு தேசிய தின அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொள்ளும் காலத்தின் முதல் நாளான இன்று பலர் சமூக மன்றங்களிலும் வசிப்போர் குழுக்களின் அலுவலகங்களிலும் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு சிங்கப்பூரரும் நிரந்தரவாசியும் தங்கள் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் காட்டி ஓர் அன்பளிப்புப் பையைப் பெற்றுக்கொள்ளலாம். முன்னைய ஆண்டு களைவிட இந்த ஆண்டு அன்பளிப்புப் பைகளை முன்னதாகவே விநியோகிப்பு நிலையங்களில் பெற்றுக்கொள்வது வசதியாக உள்ளது என்று பலர் கருத்துரைத்தனர்.
முன்பு தேசிய தின அணிவகுப்புக்குச் செல்வோருக்கு மட்டுமே அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
"ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தேசிய தின அன்பளிப்புப் பை வழங்கும் திட்டம் ஒரு நல்ல யோசனை. அப்போதுதான் எல்லா சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்," என்றார் பெட்ரோலிய நிறு வனத்தில் பணியாற்றும் 62 வயது திருவாட்டி எஸ்தர் கோ. இந்த ஆண்டு தேசிய தின அன்பளிப்புப் பைகளில் காணப்படும் பத்து ஓவியங்களை குறைபாடுகள் உள்ள வளரும் ஓவியர்களும் இதர பத்து ஓவியங்களை தொடக்கநிலை ஐந்து மாணவர்களும் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது.

