பிள்ளைகளுக்கான சீன மொழி புத்தகம் இனவாதத்தைத் தூண்டுவதாக வாசகர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து தேசிய நூலக வாரியம் அந்தப் புத்தகத்தை மறு ஆய்வுக்காக அகற்றியுள்ளது.
வாசகர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை வாரியம் மறுஆய்வு செய்து வருவதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் ' தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினார். சுயேட்சையான குடிமக்கள் அடிப்படையிலான நூலக ஆலோசனைக் குழுவுடன் வாரியம் இந்த மறுஆய்வைச் செய்யும் என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
மாநிறத்தோலும் சுருண்ட தலைமுடியும் கொண்ட 'மாவ் மாவ்' என்ற சிறுவன் பிற சிறார்களுக்குத் தொல்லைக் கொடுத்து வந்ததாக 'வெல்லப் போவது யார்?' என்ற தலைப்பைக் கொண்டுள்ள இந்தச் சீன புத்தகத்தின் கதை குறிப்பிடுகிறது. 'மாவ் மாவ்' என்ற தொடர் சீனத்தில் அதிக முடி உள்ளவர் எனப் பொருள்படுகிறது.
ஏழு வயது முதல் ஒன்பது வயது வரையிலான பிள்ளைகளுக்கான இந்த புத்தகம் 2018ஆம் ஆண்டில் 'சிங்கப்பூரில் மார்ஷல் கெவண்டிஷ் எடியுகேஷன்' என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது.
இந்தப் புத்தகத்தை பிடோக் நூலகத்திலிருந்து தமது எட்டு வயது மகனுக்காக இரவல் வாங்கிய 42 வயது தாயார் எஸ்டெல்லா யாங், புத்தகத்தைப் படித்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்ததாக ' தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.
கதையில் மாவ் மாவ் என்ற கதாபாத்திரம் மட்டும் மாநிறத் தோல் கொண்டுள்ளதாகச் சித்திரிக்கப்பட்டதைச் சுட்டிய திருமதி யாங், இனவாதச் சொற்றொடர்களால் அந்தக் கதாபாத்திரம் வர்ணிக்கப்பட்டதை 'உம் யூசுப்' என்ற பெயருள்ள தமது பேஸ்புக் பக்கத்தின் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.
தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளத்தில் உள்ள நூலகப் பொருட்களின் மறுஆய்வுக்கான விண்ணப்பச் சேவையின் வழியாக திருமதி யாங் தமது கருத்துகளைச் சமர்ப்பித்தார்.

