என்டியுசி இன்கம் நிறுவனத்திடம் ஒரு காப்புறுதி கோரிக்கையை எவ்வாறு சமர்ப்பிப்பது என்று மெக்பர்சன் தொகுதி குடியிருப்பாளரான 66 வயது டான் மெங் ஹுவாட்டுக்குத் தெரியவில்லை.
கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ல் வசிக்கும் டாக்சி ஓட்டுநரான அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) திருவாட்டி டின் பெய் லிங்கிடம் உதவி கேட்டார்.
இரண்டு நாட்களுக்குள், அந்தக் காப்புறுதிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முறைகளை திருவாட்டி டின், திரு டானுக்கு விளக்கி பதிலளித்தார்.
இச்செயலால் மகிழ்ந்துபோன திரு டான், "2011ல் திருவாட்டி டின் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அரசியலுக்கு மிகவும் இளையவர் என்று கருத்துரைத்தனர். ஆனால், அந்தக் கருத்தைப் பொய்யாக்கும் வகையில் அவர் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் மனங்களில் குடிகொண்டுள்ளார்," என்றார்.
குடியிருப்பாளர்களின் தேவைகளை 36 வயது திருவாட்டி டின் நன்கு புரிந்துவைத்துள்ளதால், 28,513 வாக்காளர்களைக் கொண்டுள்ள மெக்பர்சன் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் அவர், மக்கள் சக்தி கட்சியின் கோ மெங் செங்கைத் தோற்கடித்து 71.74% வாக்குகளுடன் வென்றார்.
பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் திருவாட்டி டின், தமது கடமையில் தொடர்ந்து கவனம் செலுத்து வருகிறார். முதிர்ச்சியடைந்த பேட்டையான மெக்பர்சனுக்குரிய திட்டங்களை அவர் வகுத்துள்ளார்.
"மெக்பர்சன் ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டையாக இருந்தாலும் அங்கும் இளையர் பலர் வசிக்கிறார்கள். ஆக, அவர்களின் தேவைகளையும் நான் கவனிக்க வேண்டும். அவர்களைச் சென்றடையும் வழிகளை ஆராய வேண்டும்," என்று திருவாட்டி டின் விவரித்தார்.

