சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் அதிகம் மழை பெய்தது என்றும் அதனால் குளிர்ந்த பருவநிலை நிலவியதாகவும் ஜூலை மாதமும் அது தொடரக்கூடும் என்றும் வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.
இந்த மாதத்தில் சில நாட்களில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறையும். அதோடு அதிக அளவு மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஜூன், ஜூலை மாதங்களில் வெப்பமான பருவநிலையே இருந்துள்ளது.
இருபது ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஜூன் மாதத்தில்தான் அதிக அளவு குளிர்ந்த பருவநிலை நிலவியதாகவும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததாகவும் பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனினும் இது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாத மொத்த மழையின் அளவு 213 மில்லி மீட்டர்.
ஆனால், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெய்த மழையின் மொத்த அளவு 233.8 மில்லி மீட்டராக இருந்தது. அதேபோல் வெப்பநிலையில் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்தைக் காட்டிலும் .2 டிகிரி செல்சியஸ் குறைந்து 28.1 ஆக இருந்தது.
கடந்த ஜூன் மாதம் பெய்த மழையால் ஜூரோங் டவுன் ஹால் ரோடு, நியூ அப்பர் சாங்கி ரோடு சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.
மாதாந்திர சராசரி மழையின் அளவு ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன் ஆகிய மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் 1875க்கும் 2017க்கும் இடையில் பதிவான அளவை விட அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் புவி ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் பெஞ்சமின் ஹார்டன் கூறினார்.

