சூரியசக்தியை பகிர்ந்துகொள்ளும் முன்னோடித் திட்டம்

சூரியசக்தியை பகிர்ந்துகொள்ளும் முன்னோடித் திட்டம்

1 mins read
4b4f5ee7-b18e-4952-b1a5-5ab9f2812957
படம்: சினோகோ எனர்ஜி -

சிங்கப்பூரில் தனிநபர்களும் நிறுவனங்களும் சூரிய சக்தியை ஒருவருக்கொருவர் விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏதுவான ஒரு கட்டமைப்பைக் கொண்ட புதிய முன்னோடித் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 'சினோக்கோ எனர்ஜி' மின் உற்பத்தி நிறுவனத்தின் இந்தக் கூட்டு முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் சூரிய சக்தியை எளிதில் ஒருவருக்கொருவர் வாங்கி, விற்று பயன்பெறும் வகையில் பகிர்ந்துகொள்ளமுடியும்.

இந்த ஆறு மாத முன்னோடித் திட்டத்தை, 'சினோக்கோ எனர்ஜி' நிறுவனம், மின்சக்தி உருவாக்கத்தில் புதிய உத்திகளைக் கையாளும் உள்ளூரின் 'எலட்ரிஃபை' நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து செயல்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டம் நிறைவுபெறும்போது சினோக்கோ நிறுவனத்திடம் இருந்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட சூரியசக்தியை விற்பதற்கும் வாங்குவதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரியத்தகடுகளைப் பொருத்தி சூரியசக்தி உற்பத்தி செய்வோர், தங்கள் பயன்பாட்டுக்குப் பின் எஞ்சிய சூரிய சக்தியை நேரடியாக மற்றவரிடம் விற்பனை செய்யலாம். இதற்கு இந்தப் புதிய திட்டத்தின் கட்டமைப்பு உதவும்.

இந்த சூரியசக்திப் பயன்பாட்டை அளவிடுவதற்கு நவீன அளவீட்டுக் கருவி பயன்படுத்தப்படும். இந்தக் கருவி மூலம் நாம் பயன்படுத்தும் சூரியசக்தியின் அளவையும் நம்மிடம் எஞ்சியுள்ள சூரியசக்தியின் அளவையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளமுடியும். அத்துடன் சூரிய சக்தியின் சந்தை மதிப்பை நிர்ணயித்து அதன் விலையை நம்மால் தீர்மானிக்க முடியும்.

சினோக்கோ எனர்ஜியின் தற்போதைய வாடிக்கையாளர்களும் புதிய வாடிக்கையாளர்களும் இந்த முன்னோடித் திட்டத்தில் பங்கெடுக்க விருப்பம் தெரிவிக்கலாம்.