சிங்கப்பூர் மாபெரும் விற்பனை மின்னிலக்கமயமாகும்

2 mins read
c6c41fa0-623c-480a-9ef0-c471102adade
வாடிக்கையாளர்கள் இந்தத் தளத்தில் மெய்நிகர் காணொளிகள் மூலம் பல பொருட்களையும் பார்வையிடலாம். படம்: GSS.SRA.ORG.SG -

சிங்கப்பூர் மாபெரும் விற்பனை இங்கு 26 ஆண்டுகாலமாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு விற்பனை செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை நடக்கும். 800 பிரபலமான நிறுவனங்களின் பொருட்கள் விற்பனையில் இடம்பெறும்.

இந்த ஆண்டில் முதன்முதலாக மாபெரும் சிங்கப்பூர் விற்பனை பெரும்பாலும் மின்னிலக்கமயமானதாக இருக்கும். மெய்நிகர் காட்சி அறைகள், கலந்துறவாடும் விளையாட்டுகள், பிரத்தியேக விற்பனைப் பொருட்கள் அட்டவணை முதலான பலவும் இந்த ஆண்டு விற்பனையில் இடம்பெறும்.

சிங்கப்பூரின் மாபெரும் சில்லறை வர்த்தக நிகழ்ச்சி என்று குறிப்பிடப்படும் இந்த விற்பனை பொதுவாக கடைகளிலும் இணை யம் வழியாகவும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடக்கும்.

ஆனால் கொவிட்-19 காரணமாக இந்த விற்பனை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக மே மாதம் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துவிட்டார்கள். இதனையடுத்து சிங்கப்பூர் மாபெரும் விற்பனையை மெய்நிகர் விற்பனையாக மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூர் சில்லறை வர்த்தகர்கள் சங்க ஏற்பாட்டில் இடம்பெறும் மாபெரும் விற்பனை eGSS: Shop.Win.Experience என்ற முகவரியுடன் மின்னிலக்க மயமாகிறது.

இந்த மாபெரும் விற்பனையில் கலந்துகொள்ளும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள், eGSS GoSpree என்ற முகவரியில் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த இணைப்பின் மூலம் பலவற்றையும் மெய்நிகர் காட்சிகளாக வாடிக்கையாளர்கள் பார்க்கலாம்.

இதில் பல விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு மக்கள் பரிசுகளை வெல்லலாம். பல வகை தயாரிப்புப் பொருட்களைப் பற்றி நேரடியாக விவாதிக்கலாம்.

அதில் பொருட்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்ததும் அந்தப் பொருட்களுக்குச் சொந்தமான வியாபாரிகளின் இணையத்தளங்கள், மின்னிலக்கத் தளங்களுடன் தொடர்புகொண்டு மக்கள் பொருட்களை வாங்கலாம்.

மின்னிலக்கமய சிங்கப்பூர் மாபெரும் விற்பனை, இங்கு ஒன்பது மாத காலம் நடந்துவரும் $45 மில்லியன் செலவிலான இயக்கம் ஒன்றின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது.

அந்த இயக்கம், உள்ளூர் வாழ்க்கைபாணி மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்குப் பெரும் ஊக்குவிப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு சிங்கப்பூர் மாபெரும் விற்பனை மின்னிலக்கமயத்திற்கு மாறும் என்பதால் உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள் மின்னிலக்கமயத்தை தழுவிக்கொள்ள மேலும் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அது ஒருமித்த கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் மாபெரும் விற்பனை நிகழ்ச்சியின்போது உள்ளூர் தயாரிப்புப் பொருட்களை மேம்படுத்தலாம் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

உள்ளூர் வடிவமைப்பாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களின் நவநாகரிக உடைகள், வாழ்க்கைபாணி பொருட்கள் ஆகியவற்றை Oneorchard.store என்ற இணைய விற்பனைத் தளத்தின் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனையைத் தீவிரப்படுத்தலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.