ஏலக்குத்தகையாளர்கள் மற்றும் துணை ஏலக்குத்தகையாளர்கள் ஆகியோரிடமிருந்து கடன் என்ற பெயரில் $1.24 மில்லியன் லஞ்சம் வாங்கியதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (எல்டிஏ) முன்னாள் துணை குழும இயக்குநர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஹென்றி ஃபூ யங் தை, 46, (படம்) எனப்படும் அந்த சிங்கப்பூரருக்கு சூதாட்டப் பழக்கம் இருந்ததாகவும் கடன்கள் அவருக்கு இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆணையத்தின் ஏலக்குத்தகையாளர்களிடம் இருந்தும் துணை ஏலக்குத்தகையாளர்களிடம் இருந்தும் 2014க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் கடன் என்ற பெயரில் அவர் பணம் பெற்றதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு துணை ஏலக்குத்தகையாளரிடம் இருந்து சுமார் $30,000 அவர் பெற முயன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆணையத்தில் உள்ள சக ஊழியர்கள் 2008ஆம் ஆண் டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தம்மிடம் கடனாகக் கொடுத்த $726,500ஐ ஃபூ ஏமாற்றியதாகவும் கூறப்பட்டது.
மொத்தம் 36 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அவருக்கான பிணைத்தொகை $250,000 என நிர்ணயிக்கப்பட்டது.
தங்களது வர்த்தகத்துக்கு அனுகூலன்களைப் பெறும் பொருட்டு ஃபூவுக்கு கடன் கொடுத்த ஆறு பேர் மீதும் ஒரு நிறுவனம் மீதும் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களுக்கான பிணைத்தொகை $25,000 முதல் $200,000 வரை நிர்ணயிக்கப்பட்டது. ஆணையத்திடம் இருந்து அனுகூலன்களைப் பெறும் பொருட்டு ஃபூவுக்கு கடன் என்ற பெயரில் $220,000 அளித்ததாக 'சைனா ரயில்வே டன்னல் குரூப்' (சிஆர்டிஜி) நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை மீது மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவோருக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
இருப்பினும் அரசாங்கம் அல்லது பொது நிறுவன ஏலக்குத்தகை தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான சிறைத் தண்டனை காலம் ஏழாண்டு வரையில் அதிகரிக்கப்படலாம்.
லஞ்ச ஊழல் மற்றும் மோசடி விவகாரங்களை சிறிதளவும் சகித்துக்கொள்ள இயலாது என்று லஞ்ச ஊழல் புலன்விசாரணைப் பிரிவு அதன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

