தங்கும் விடுதிகளில் அதிக அபாயமுள்ளவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்துதல் 'நூதனமான' உத்தி

2 mins read
6a495d49-00ea-43b1-b3a4-00e237d31964
கோப்புப்படம்: எஸ்டி, காலிட் பாபா -

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்தபோது, அவர்களில் அதிக அபாயமுள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள், இதர உடல் உபாதைகள் உடையவர்கள் ஆகியோரை உடனடியாகத் தனிமைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு நூதனமான உத்தி என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் டேல் ஃபிஷர் பாராட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையக் கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் ஃபிஷர், "அதிக அபாயமுள்ளவர்களைத் தனிமைப்படுத்திய பிறகு, அடுத்துள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பிரித்து அவர்களுக்கு நாள்தோறும் பரிசோதனைகளை நடத்தி அவர்களைக் கண்காணிக்கும் பெரிய பொறுப்பு மேற்கொள்ளப்பட்டது.

"மரணங்களைத் தவிர்ப்பதில்தான் இங்கு முழுக் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, கிருமித்தொற்றைத் தவிர்ப்பதில் செலுத்தப்படவில்லை. இதனால், மரணங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது," என்றார்.

"இதனால்தான் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 48,000ஐத் தாண்டினாலும் மரண எண்ணிக்கை 27ல் நிற்கிறது. இதை எவ்வாறு சாதித்தீர்கள் என்று உலக நாடுகள் சிங்கப்பூரைப் பார்த்து வியந்து கேட்கின்றன.

"கிருமித்தொற்று தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஊழியர் தங்கும் விடுதிகள் பல கிருமித்தொற்று அற்றவையாக மெல்ல, படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன," என்று பேராசிரியர் ஃபிஷர் விவரித்தார்.

தனிமைப்படுத்துதல், கிருமி பரிசோதனை, பாலிமரேஸ் எதிர்வினை சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று அற்றவையாக அறிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அளவுக்கு அதிகமாக தோன்றிய கிருமித்தொற்று பரவல் சிங்கப்பூர் பங்கெடுக்க விரும்பாத ஒரு 'நெடுந்தூர ஓட்டப்பந்தயம்' என்று வர்ணித்த பேராசிரியர் ஃபிஷர், தொற்றுள்ள நோயாளியை வெளியே அனுப்பக்கூடாது என்பதை உறுதி செய்ய எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்றார்.