மூத்த துணை அமைச்சர்களாகப் பதவி வகித்த டாக்டர் மாலிக்கி ஒஸ்மானும் திரு எட்வின் டோங்கும் முழு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் அலுவலக அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் 55 வயதான டாக்டர் மாலிக்கி, கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சராகவும் செயல்படுவார்.
இப்போது அவர் தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சராக இருந்து வருகிறார். புதிய அமைச்சராக நாளை பதவியேற்ற பிறகு தென்கிழக்கு வட்டார மேயர் பதவியை அவர் துறந்துவிடுவார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சராகவும் சட்ட இரண்டாம் அமைச்சராகவும் திரு டோங், 50, செயல்படுவார். இப்போது அவர் சட்ட, சுகாதார துணை அமைச்சராக இருக்கிறார்.
புதிய அமைச்சரவையில் பதவி உயர்வு பெற்றவர்களில் இவ்விருவரும் முக்கியமானவர்கள்.
இப்போதைக்கு தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சராக இருந்து வரும் திரு ஸாக்கி முகம்மது, 45, மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருவாட்டி லோ யென் லிங், 45, கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
தாம் இப்போது வகித்து வரும் கல்வி, மனிதவள அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பொறுப்பைத் துறக்கவுள்ள திருவாட்டி லோ, தென்மேற்கு வட்டார மேயராகத் தொடர்ந்து நீடிப்பார்.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சராக இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், 52, நியமிக்கப்பட்டுள்ளார். தாம் இப்போது வகித்து வரும் சமுதாய, குடும்ப மேம்பாடு மற்றும் கல்வி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பதவியை அவர் துறந்துவிடுவார்.
கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் திருவாட்டி சுன் சூலிங், 41. உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் என்ற பொறுப்பை அவர் துறக்கவுள்ளார்.
ஜூரோங் குழுத் தொகுதி எம்.பி.க்களில் ஒருவரான திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம், 40, வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகச் செயல்படத் தொடங்குவார்.
இரண்டு வட்டாரங்களுக்குப் புதிய மேயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மரின் பரேட் குழுத் தொகுதியில் இருந்து மக்கள் செயல் கட்சியின் சார்பில் முதன்முறையாக எம்பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் திரு முகம்மது ஃபாமி அலிமான், 48, தென்கிழக்கு வட்டார மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி எம்.பி.யான திரு அலெக்ஸ் யாம், 39, வடமேற்கு வட்டார மேயர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

