ஏழு புதுமுகங்களுக்கு அமைச்சரவைப் பதவிகள்

ஏழு புதுமுகங்களுக்கு அமைச்சரவைப் பதவிகள்

2 mins read
23bf75b5-d521-42cc-aa1e-303e1f3ca6ca
(மேல்வரிசை இடமிருந்து) டாக்டர் டான் சீ லெங், திருவாட்டி கான் சியாவ் ஹுவாங், திரு எல்வின் டான், திரு டெஸ்மண்ட் டான், திரு டான் கியட் ஹாவ், திரு எரிக் சுவா, திரு முகம்மது ஃபாமி அலிமான் ஆகிய ஏழு பேருக்கும் அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மக்கள் செயல் கட்சி -

புதிய அமைச்சரவையைப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்தார்.

மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஏழு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் சீ லெங், மேரிமவுண்ட் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங், தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எல்வின் டான், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டெஸ்மண்ட் டான், ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டான் கியட் ஹாவ், தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எரிக் சுவா, மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முகம்மது ஃபாமி அலிமான் ஆகிய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

55 வயது டாக்டர் டான் சீ லெங்கிற்கு மூன்று பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலக அமைச்சர், மனிதவள இரண்டாம் அமைச்சர், வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரிகேடியர் ஜெனரலான 45 வயது திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் கல்வி, மனிதவள துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சராக 50 வயது திரு டெஸ்மண்ட் டான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக 41 வயது திரு எரிக் சுவா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக, தேசிய வளர்ச்சி துணை அமைச்சராக 43 வயது திரு டான் கியட் ஹாவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க கருத்தறியும் பிரிவான 'ரீச்'சின் புதிய தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு திரு சேம் டான் அந்தப் பதவியை வகித்தார். அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதால் 'ரீச்'சின் தலைவராக திரு டான் கியட் ஹாவ் பொறுப்பேற்கிறார்.

தென்கிழக்கு வட்டாரத்தின் மேயராகப் பதவி வகித்த டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், முழு அமைச்சராகப் பதவி பெற்றிருப்பதால் அவருக்குப் பதிலாக 47 வயது திரு முகம்மது ஃபாமி அலிமான் அப்பொறுப்பை ஏற்கிறார்.

இந்தப் புதிய நியமனங்கள் நாளை முதல் நடப்புக்கு வரும்.

செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சின் துணை அமைச்சராக 40 வயது திரு எல்வின் டான் பொறுப்பேற்கிறார்.