அமைச்சரவையில் இருந்து ஓய்வுபெறும் மூவரில் வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் டான் வு மெங்கும் ஒருவர்.
45 வயதாகும் அவர் தமது மருத்துவப் பணிக்குத் திரும்புகிறார். மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் இருந்து வெளியேறுபவர்களில் ஆக இளையவர் அவர்.
ஓய்வுபெறும் மற்ற இருவர் போக்கு
வரத்து அமைச்சர் கோ பூன் வான், 67, வெளியுறவு மற்றும் சமுதாய குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சேம் டான், 61. இவ்விருவரும் அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தனர். அதன் காரணமாக இம்மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை.
ஓய்வுபெறும் மூவரும் அரசாங்கத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்புகளுக்கு பிரதமர் லீ சியன் லூங் நேற்று நன்றி தெரிவித்தார். காணொளி வழியாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர், கடந்த 2018ஆம் ஆண்டு மூத்த நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் டான், மருத்துவப் பணிக்குத் திரும்ப அரசாங்கத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார்.
வெளியுறவு அமைச்சின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் என்ற முறையில் அனைத்துலகக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிங்கப்பூரின் விருப்பங்களை டாக்டர் டான் திறம்பட வெளிப்படுத்தியதாகவும் திரு லீ தெரிவித்தார்.
வர்த்தக, தொழில் அமைச்சில் இருந்தபோதும் பயனீட்டாளர் நலன்களில் கவனம் செலுத்திய டாக்டர் டான், தொழில் தொடங்குவோருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை நடத்துவோருக்கும் தொழில்சார்ந்த குழு அமைக்க ஆலோசனை வழங்கியதாகவும் பிரதமர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டார்.
ஜூரோங் குழுத்தொகுதியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்கு திரு லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தமது ஓய்வை அறிவித்ததும் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த டாக்டர் டான், அரசாங்கத்தில் பங்கேற்று இருந்த காலம் பயனுள்ளதாக இருந்ததெனக் குறிப்பிட்டார். மக்களையும் நோயாளிகளையும் நேரடியாகக் கவனித்துக்கொள்வதே தமது முதல் விருப்பமாக எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார். திரு கோ பூன் வான் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். தாம் அதிகம் கையாண்ட விவகாரங்கள் தொடர்பில் இளம் அமைச்சர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கி தமது அனுபவங்களையும் அறிவாற்றலையும் பகிர்ந்துகொள்ள திரு கோ தயாராக இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
திரு கோ பூன் வான் வகித்து வந்த போக்குவரத்து அமைச்சர் பொறுப்புக்கு ஓங் யி காங் நியமிக்கப்பட்டுள்ளார்.

